நாடோடி Nomad
Social Studies Updates
#காந்திய_பொருளாதாரம் #ஏன்_இந்தியாவில் #சாத்தியமில்லாமல்_போனது?
கீழ்க்கண்டவை இன்றைய நிகழ்வுக்கு பின்னரான எனது தனிப்பட்ட கருத்து. காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையே பொருளாதார நடவடிக்கைகளிலும், பொருளாதார வளர்ச்சியிலும் அனைவரையும் ஈடுபடுத்துவது தான். அதைத்தான் Not mass production but production by mass என்றார். வளங்களை கன்னாபின்னாவென்று பயன்படுத்தாமல் அல்லது சுரண்டாமல், நெடுங்காலத்திற்கு நீடிக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சியை (sustainable development) ஏற்படுத்துவது தான் காந்திய பொருளாதார கொள்கை. இதை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கு என்ன சிக்கல் ஏற்பட்டது?
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட இந்தியா முடிவு செய்தது. இந்த வளர்ச்சியை எட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதாக உணர்ந்தோம். நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட வளர்ந்த நாடுகள் எத்தனை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்டன? அதற்காக அந்த நாட்டின் அடித்தட்டு மக்கள் அல்லது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் கொடுத்த விலை அல்லது தியாகம் என்ன? தியாகம் விலை என்ற இரண்டும் மிகவும் டீசன்ட்டான வார்த்தைகள் ஆனால் உண்மையில் பண்ணை அடிமைகளான அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட உரிமைகள் தான் அவை. எஜமானர்களின் உடமைகளாக கருதப்பட்ட பண்ணை ஆடு மாடுகளை போல் அவர்கள் நடத்தப்பட்டனர். தரம் பார்த்து விலைக்கு வாங்கி விற்கப்பட்டனர். தொழிற்சாலைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் அசுத்தமான சூழலில் பதினெட்டு இருபது மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். அந்த வேலைக்கும் உத்திரவாதம் கிடையாது. குறிப்பாக தொழில்மயமாக்கலில் அச்சாணியான இயந்திரமயமாக்கல் அவர்களுக்கு நரகத்தை காட்டியது.
கிட்டத்தட்ட இரண்டு நிமிடத்தில் தயாராகும் இன்றைய அவசர உணவு போல் பொருளாதாரத்தை உயர்த்த முடிவு செய்தோம். இந்த அவசர தேவைக்கு காரணமாக ஒரு முக்கிய காரணியை கூறலாம். அது அக்கம்பக்கத்து நாடுகளுடனான உறவுகள். மேற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தான். வடக்கே சீனா. இந்த நிலையில் 1947-48ல் இந்தோ பாகிஸ்தான் (பாகிஸ்தான் பழங்குடியினருடன்) போர், பின்னர் 1962ல் சீனா போர், 1965 மற்றும் 1971ல் இந்தோ பாகிஸ்தான் போர். இது இந்தியாவின் பாதுகாப்பு செலவை அதிகரித்தது. மேற்கத்திய நாடுகளில் இந்த சூழல் கிட்டத்தட்ட நெப்போலியனின் வருகைக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 15, 16ம் நூற்றாண்டில் இருந்தே ஆதிக்கம் செலுத்த போர் நடந்து கொண்டே தான் இருந்தது. அதன் பின் தேசியவாத போர்கள். இதனால் பாதுகாப்பை உயர்த்தவும், பிராந்தியத்தில் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை விரைந்து உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் பின்னணி தான் காலனியாக்கம்!
இந்தியா எதிர்கொண்ட இன்னொரு சவால் காலனியாக்கம் (colonization). இந்தியா காலனி ஆனதற்கான காரணிகளில் முக்கிய காரணி தொழில்நுட்ப பின்னடைவு. குறிப்பாக ஐரோப்பிய பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் இந்திய சிப்பாய்களின் எண்ணிக்கை தோற்றுப் போனது. வெறும் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் சிப்பாய்களை கொண்டு லட்சக்கணக்கான வீரர்கள் கொண்ட இந்திய படைகளை வென்றது ஆங்கிலேய கம்பெனி படை. சுதந்திரத்தின் போது இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் இதுவும் ஒன்று. மீண்டுமொரு காலனியாத்திற்கு இந்தியா தயாராக இல்லை. தொழில்நுட்பத்தை வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக உயர்த்த வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடுகளை இந்தியாவின் துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும். பாதுகாப்பு காரணங்களை தவிர்த்தால் இந்தியாவிற்கு பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் தேவையில்லை. தொழிற்சாலை உற்பத்திக்கு தேவைக்கும் அதிகமான மனிதவளம் (சனத்தொகை) இந்தியாவில் உள்ளது. உள்நாட்டிலேயே மிகப்பெரிய சந்தை (சனத்தொகை) இருக்கும் போது அவசரமாக பெரும் உற்பத்தி (mass production) செய்து ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஆக பெரியதாக தொழில்நுட்பங்கள் தேவையில்லை. ஆதலால் அளவான எரிசக்தி (fuel) போதும். இது இறக்குமதியை குறைக்கும். இதை சமன் செய்யவும் ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. மேற்கூறிய பிரச்சினைகள் தான் நம்மை காந்திய பொருளாதாரத்தில் இருந்து தள்ளி வைத்ததன் காரணமாக இருக்கக்கூடும்.
இன்றைய காரணங்கள் வேறு. அவை தனி நபர்களின் அணுகூலத்திற்காக செய்பவை.
- நாடோடி Nomad
#காயங்களை_கடந்து...
இன்றைக்கு எங்களது பயிற்சிப்பட்டறைக்கு வந்திருந்து சிறப்பித்தவர் இந்திய ஆட்சிப்பணியை சேர்ந்த திரு இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள். அவரது சிறு வயதில் தந்தையை இழந்து விட, அரசு ஊழியரான அவரது தந்தையின் வேலையை தனக்கு வாங்க அலையாய் அலையும் இளம்பகவத் அவர்களை ஒரு அதிகாரி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். பின்னாளில் அவர் குரூப் 4 எழுதி தேர்ச்சி பெற்று, பின்னர் குரூப் 1ல் தேர்ச்சி பெற்று, அதன் பின்னரும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் IRS IAS இரண்டிலும் தேர்வு பெற்றார். அவர் IRS தேர்வான பின்னர் எதேச்சையாக அவரை அவமானப்படுத்திய அதே அதிகாரியை சந்திக்க நேர்கிறது என்பது அவரது வாழ்க்கையில் நடந்தது.
இது குறித்து என் மனைவி அவரிடம் "அந்த அவமானம் உங்களுக்கு உத்வேகமாக (motivation or inspiration) இருந்ததா?" என்று கேள்வி கேட்டார் .
அதற்கு திரு இளம்பகவத் பதிலளிக்கையில் " நானும் அந்த சம்பவத்தை மறந்திருந்தேன், அந்த அதிகாரியும் என்னை நினைவில் வைத்திருந்தார் ஆனால் அந்த சம்பவத்தை அல்ல. அவரை சந்தித்த போது நாங்கள் அது குறித்து பேசவே இல்லை. அவருக்கு அன்று என்னை காயப்படுத்தும் நோக்கம் இருந்திருக்காது. நம்மை காயப்படுத்தும் பலருக்கும் நம்மை காயப்படுத்தும் நோக்கம் இருக்காது. ஆனால் அது நம்மை காயப்படுத்தும்!" என்றார். எவ்வளவு பெரிய புரிதல். இதை அகிம்சை என்பதை விட ஒரு வித ஜென் நிலை என்றே கருதுகிறேன். வாழ்க்கையில் கடுமையான காலங்களை கடந்து வந்தவர்களிடம் மட்டுமே இந்த ஒரு அனுபவம் வாய்ந்த சாந்தம் நிறைந்திருக்கும். இந்தப் புரிதல் இருந்து பல பிரச்சனைகளுக்கு விடிவு காலம் பிறக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரச்சினைகளே ஏற்படாது. நிறைய யோசிக்க வைத்த பதில். ஆனால் இதை புரிந்து கொள்ள வாழ்வில் நிறைய கடந்திருக்க வேண்டும்.
- நாடோடி Nomad
#நீட் ( ) #ரகசியங்கள்
கேரள முதல்வர் பிணராயி விஜயன் இன்று ஒரு பேட்டியில், "காங்கிரஸ் பிஜேபியின் பி-டீம். இரண்டுக்கும் கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் ஏதும் கிடையாது. வெறும் தேர்தல் (அதிகாரம்) காரணமாகவே காங்கிரஸ் பிஜேபியை எதிர்க்கிறது" என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவராவார். இந்த சமயத்தில் நீட் தேர்வு குறித்த வெகுசில அரசியல் ரீதியான விடயங்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கொஞ்சம் பார்ப்போம். நீட் தேர்வுக்கான வரைவு (draft) 2012லேயே காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, மத்தியில் கபில் சிபில் கல்வி அமைச்சராக இருந்த போது தயாராகிவிட்டது.
இருப்பினும் அதை நடைமுறைப்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் இருந்ததால் 2013க்கு தள்ளிப் போடப்பட்டது. 2013ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வு முதல் முறையாக நடத்தப்பட்டது. ஆக நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது பிஜேபி ஆட்சி காலத்தில் அல்ல காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில். அதில் திமுகவும் அங்கம் வகித்து அமைச்சரவையிலும் இடம்பெற்றது கசப்பான உண்மை. நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று காரணத்தால் அந்த தேர்வு முடிவுகளை உச்சநீதிமன்றம் இரத்து செய்தது. இந்த தேர்வுக்கு எதிராக வந்த நூற்றி பதினைந்து மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்தது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த நூற்றி பதினைந்து மனுக்களில் தமிழக அரசின் மனுவும் ஒன்றாகும். அந்த நேரத்தில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.
இதில் தெளிவாக உணர வேண்டியது நீட் தேர்வை திட்டமாக தீட்டயதோடல்லாமல் இந்தியா முழுமைக்கும் முதல் முறையாக அமல்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகித்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான். அதன் பின்னர் 2016ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று நீட் தேர்வுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்பை இரத்து செய்து நீட் தேர்வை அங்கீகரித்தது.
- நாடோடி Nomad
#அன்றைய_குழந்தைகளும் #இன்றைய_குழந்தைகளும்
நாம் சிறு குழந்தைகளாக இருந்த பொழுது, அதாவது 70 மற்றும் 80களின் காலக்கட்டத்தில் இருந்த விடயங்களை கொஞ்சம் அலசலாம். அந்த காலகட்டத்தில் குழந்தைகளாக இருந்த நம்மை படிப்பில் இருந்து திசைதிருப்ப இருந்த கவனச் சிதறல்கள் (distractions) என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். பொதுவாக நகரங்களில் வசித்தவர்கள் வீடுகளில், வீட்டில் இருக்கும் வேலைகள், மளிகை சாமான்கள் வாங்க கடைக்கு செல்வது, பெண் குழந்தைகளாக இருந்தால் வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகள். நகரத்தில் வசிக்கும் சிறு வியாபாரிகள் வீட்டு குழந்தைகளாக இருந்தால் மாலையில் தந்தைக்கு துணையாக கடையில் வேலை செய்ய வேண்டியிருக்கும். கிராமங்களில் மாடு மேய்க்க, காடு கழனிகளில் வேலை பார்ப்பது போன்ற வேலைகள் இருக்கும். இவை உபயோகமான காரியங்கள் (productive) தான்.
இது போன்ற கவனச் சிதறல்கள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை என்பது தான் குழந்தைகளுடனான நமது இன்றைய வாதம். படிப்பது மட்டும் தான் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கான வேலை என்கிற ரீதியில் நமது வாதங்கள் செல்லும். இதையும் தாண்டி நண்பர்கள், அவர்களுடன் வெளியில் சென்று விளையாடுவது போன்றவையும் நமக்கான கவனச் சிதறல்களாக இருந்தன. ஆனால் இதைத் தான்டி சில விடயங்களும் உண்டு. நாம் கெட்டுப் போகும் வகையிலான கவனச் சிதறல்கள் அன்றைய காலகட்டத்தில் மிக மிகக் குறைவு. உதாரணமாக ஒரு மோசமான சினிமாப் படம் பார்க்க வேண்டும் என்றால் ஊருக்கு வெளியே செல்ல வேண்டும். அது போன்ற திரையரங்குகள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். ஊருக்குள் கடைகளில் புகையிலை, சிகரெட் போன்ற விடயங்களை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியாது. கடைக்காரர் தெரிந்தவராக இருப்பார். சாராயக்கடை ஊருக்கு வெளியே தான் இருந்தது.
ஆனால் இன்றைய குழந்தைகளின் சூழலை யோசித்துப் பாருங்கள். அத்தனை ஆபாசக் குப்பைகளும் ஸ்மார்ட்போன் என்ற பெயரில் உள்ளங்கையில். இன்றைக்கு ஸ்மார்ட் தொலைக்காட்சிகளும் வந்துவிட்டது. வீட்டுக்கு எதிரேயும் அருகேயும் டாஸ்மாக்குகள். சமூகப் பொறுப்பில்லாத, லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட கடைக்காரர்கள் வயதுப் பையன்களுக்கு புகையிலை, சிகரெட் போன்றவற்றை எந்த கேள்வியும் கேட்காமல் குடுத்து விடுகிறார்கள். புகையிலையில் விதவிதமான பிராண்டுகள். அரசின் கட்டுப்பாடுகளற்ற அன்றைய காலக்கட்டத்தில் கூட இத்தனை விதமான புகையிலை, சிகரெட்டுகள் கிடையாது. ஆனால் அரசு இன்றைக்கு எத்தனையோ கடுமையான சட்டதிட்டங்களை விதித்துள்ளது. அதையும் மீறி தான் விதவிதமான புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் குழந்தைகளை வந்தடைகின்றன. இது போக அரசாங்கத்தாலே அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு இணையதள சூதாட்ட விளையாட்டுக்கள்.
இத்தனை சோதனைகளையும் கடந்து தான் குழந்தைகள் தங்களது நற்பண்புகளை காத்துக்கொள்ள வேண்டியுள்ளது, படிக்க வேண்டியுள்ளது. இது குழந்தைகளை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. நமது சூழலை விட மிகக் கடினமான சூழலை இன்றைய குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். தொடர்ந்து பேசுவோம்..
- நாடோடி Nomad
#அன்றைய - #இன்றைய_குழந்தைகள்
நான் பதினோராம் வகுப்பு பயிலும் போது, உடன் பயிலும் நண்பர்களில் சேட்டை அதிகம் செய்யும் நண்பர் ஒருவர் இருந்தார். அவரது அப்பா ஒரு பொறியாளர். ஒப்பந்த முறையில் கட்டிடங்கள் கட்டித் தரும் தொழில் செய்து வந்தார் - building contractor. நல்ல வசதி. வீட்டிற்கு ஒரே பையன். அம்மா ரொம்ப செல்லம் ஆனால் அப்பா கண்டிப்பானவர்.
பள்ளியில் நண்பரது நடத்தையில் பிரச்சினை காரணமாக அவரது அப்பாவை அழைத்து வருமாறு கூறியிருந்தார் தலைமையாசிரியர். அவரும் அவரது தந்தையை கூட்டி வர தலைமையாசிரியர் அவரது தந்தையுடன் பேசி பிரச்சினையை பேசி முடித்து அனுப்பி வைத்தார். பின்னர் மற்றொரு பிரச்சினையில் மறுபடியும் அந்தப் பையன் மாட்ட மறுபடியும் தந்தையை அழைத்து வரும்படி தலைமையாசிரியர் வலியுறுத்தினார். பிரச்சினை என்னவென்றால் இந்த முறை வேறொரு தந்தை வந்திருந்தார்!! தலைமையாசிரியர் "டேய் உனக்கு எத்தனை அப்பா தான்டா இருக்காங்க??!!" என்று கேட்டு விட. வந்தவருக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை. அதன்பின் தலைமையாசிரியர் முன்னர் நடந்த விடயங்களை கூற சில உண்மைகள் வெளிவந்தன. அதாவது முந்தைய முறை அவர் தந்தையின் கண்டிப்புக்கு பயந்து ஒரு ரிக்ஷா (rickshaw) ஓட்டுனரை (அப்போதெல்லாம் ஆட்டோ, டாக்சி கிடையாது. ரிக்ஷா தான்) அழைத்து வந்திருக்கிறார். அடுத்த முறை பிரச்சினையின் போது அதே ரிக்ஷா ஓட்டுனரை தேட, அவர் கிடைக்கவில்லை. ஆதலால் தந்தையையே அழைத்து வரும்படி ஆகிவிட்டது.
அதன் பின்னர் பிரச்சினை தீவிரமானது. வீட்டிலும் நண்பர் கைவரிசை காட்டியது எல்லாம் தெரிய வந்தது. வீட்டில் அவரது தந்தை லாக்கரில் வைத்திருக்கும் நூறு ரூபாய் கட்டுகளில் கட்டுகளின் நடுவில் இருந்து தினம் ஒரே ஒரு ரூபாய் தாளை எடுத்து வந்து விடுவாராம். அவரது தந்தைக்கு அன்றைய நாள் வரை சந்தேகம் இருந்தாலும் அதை பையனிடம் வெளிப்படையாக கேட்கவில்லை. அன்றைய தினம் அந்த விடயமும் பள்ளியில் உறுதியாக தெரியவர பையனை தலைமையாசிரியர் அறையிலேயே நண்பரது தந்தை வெளுத்து வாங்கி விட்டார். அதன் பின்னர் ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் அவரை சமாதானப்படுத்தும்படியாகிவிட்டது. இந்த சம்பவத்தை இன்று கூற ஒரு காரணம் உண்டு. சமீபத்தில் பெண்கள் பயிலும் அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு பயிலும் குழந்தைகள் பள்ளியின் கடைசி நாளன்று கைபேசிகள் எடுத்து வந்து மாட்டிக்கொண்டுள்ளனர். கைபேசிகள் தலைமையாசிரியர் அறைக்கு சென்று விட்டது. பெற்றோர்களை அழைத்து வந்து வாங்கிக் கொள்ளும்படி தலைமையாசிரியர் கூறியுள்ளார். இந்த பிள்ளைகள் வெளியே காய்கறி விற்பனை செய்பவரை பெற்றோராக நடித்து கைபேசிகளை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விடயத்தை ஆசிரியர் ஒருவர் கூறி "இன்றைய குழந்தைகள் எவ்வளவு மோசமாக உள்ளனர் பாருங்க சார்!!" என்று குறைபட்டுக் கொண்டார். அவரது வருத்தம் நியாயமானது. ஆனால் இன்றைய குழந்தைகள் மட்டும்தான் சரியில்லை என்று கூறியது தான் தவறு. ஏனென்றால் நான் கூறிய முந்தைய சம்பவம் நடந்து முப்பது ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. பிரச்சினைகள் களையப்பட வேண்டியவை தான். ஆனால் இன்றைய குழந்தைகள் மட்டும்தான் மோசமானவர்கள் என்று தொடர்ந்து குழந்தைகள் மீது குற்றம் சாட்டுவது என்ன நியாயம்? தொடர்ந்து பேசுவோம்.
- நாடோடி Nomad
#பொருள்_இல்லார்க்கு_பொருட்காட்சி
சிறு வயதில் இரண்டு நாள் விடுமுறை என்றால் கூட பாட்டி வீடு தான் (தாத்தாவோட விடு தான் என்றாலும் நமக்கு அது பாட்டி வீடு தான்!). அதிலும் அம்மாவை பெற்ற பாட்டி வீடு கூடுதல் சிறப்பு. எப்போதாவது ஒரு முறை தான் செல்வேன் என்பதால் கூடுதல் பாசம் உண்டு. கடைசி சித்தி மட்டும் தான் உள்ளூர். மற்றபடி எங்கள் அம்மா உட்பட மற்ற சித்திகள் அத்தனை பேரும் வெளியூர் தான். பங்குனி சித்திரை மாதங்களில் ஊர்த் திருவிழா, பொருட்காட்சி என ஊரே களை கட்டும் என்பதால் குறைந்த பட்சம் ஒரு மாதம் உள்ளூர் தான். ஒவ்வொரு நாள் இரவும் வித விதமான மண்டகப்படி, பொருட்காட்சியில் நித்தமும் ஒரு நாடகம் என வண்ணமயமான நாட்கள் அவை. இரவில் நான்கைந்து தரை விரிப்புகள், தூக்குவாளியில் நொறுக்குத்தீனி (வேறு என்ன முறுக்கும் அதிரசமும் தான்), கூஜாவில் தண்ணீர். அதிகபட்சமாக பொருட்காட்சியில் வாங்கித் தரும் தின்பண்டம் பம்பாய் அப்பளம் எனும் பெரிய சைஸ் அப்பளம் மட்டும் தான். மிளகாய் பொடி தூவி குடுப்பார்கள். அது கூட கொஞ்சம் மாங்காய்! ஒரு நாள் ஆர்.எஸ்.மனோகர் நாடகம், ஒரு நாள் எஸ்.வி.சேகர் என இரவு நாடகங்கள் பொருட்காட்சியில் அமர்க்களமாக இருக்கும்.
வெளியூர்களில் வசிக்கும் பல்வேறு உறவினர்கள் பலரும் அந்த சமயத்தில் ஊருக்கு வந்திருப்பார்கள். ஒவ்வொரு விரிப்புகளாக கடந்து சென்று ஒவ்வொரு உறவினர்களாக நலம் விசாரிப்பதற்கு இரண்டு மணி நேரம் பத்தாது. ஒவ்வொரு உறவினர்களின் விரிப்புகளிலும் அமர்ந்து அவர்களை நலம் விசாரித்து பண்டங்களை ருசி பார்த்து முடிப்பதற்கு பல நேரங்களில் ஒரு நாள் பொருட்காட்சி பத்தாது. அனைத்து சித்திமார்கள் மற்றும் பெயரன் பெயர்த்திகளுக்கான ஒரு மாதத்திற்கான பாஸ் வாங்கி வைத்திருப்பார் தாத்தா. தினமும் நடந்தே சென்று நடந்தே வருவோம். பருவ வயது வந்தவுடன் நான் பார்த்த பொருட்காட்சிகள் வண்ணமயமானவை. தாவணி மற்றும் இரட்டை சடைகள் தான் பொருட்காட்சி என்றானது. இந்த ராட்டினம், நாடகங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் துரித உணவுகள் பொருட்காட்சியில் எங்களது முக்கிய பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன. பெரும்பாலும் எங்களது தூரத்து உறவுக்கார பெண்களாகத் தான் இருப்பார்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் இதே பொருட்காட்சியில் பார்த்த உறவுக்கார பெண்கள் இப்போது வளர்ந்திருப்பார்கள். அவர்களை பார்க்க அவர்களது இடம் தேடி அலைவது ஒரு சுகம். எந்த இடத்திலும் கண்ணியமின்றி நடந்து கொள்ள முடியாது. காரணம் பொருட்காட்சி முழுவதுமே உறவினர்கள் நிரம்பி வழிவார்கள். கடைசி சித்திக்கும், அக்காக்களுக்கும் மட்டும் விசயம் தெரியும் ஆகையால் கேலிப் பார்வையுடன் கிண்டல் செய்வார்கள். உறவுகளும் சொந்தங்களும் நிறைந்த ஒரு உணர்வுபூர்வமான வாழ்க்கை அது. ஆனால் ஒரு கட்டத்தில் பொருள் இழந்த நிலையில் அந்த உறவுகள், சொந்தங்கள் அத்தனையும் கானல் நீராகிப்போனது. பொருளுக்கு முக்கியத்துவம் பெறாத பொருட்காட்சி அன்றே தொலைந்தது.
- நாடோடி Nomad
#காணாமல்_போனவர்கள்
இந்த வருடத்திற்கான தமிழ்நாடு மாநில வழி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஒன்றாம் தேதி மொழிப்பாட தேர்வுடன் துவங்கியது. கிட்டத்தட்ட இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், தேர்வு அன்று கிட்டத்தட்ட பதிமூன்றாயிரம் பேர் வராதோராக (absentees) அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கூட்டணி பரபரப்பு, பெங்களூர் குண்டு வெடிப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, சினிமா, கிரிக்கெட் செய்திகளுக்கு இடையில் இந்த செய்தி காணாமல் போனது.
ஒட்டுமொத்த விண்ணப்பித்தோர் எண்ணிக்கையில் பார்த்தால் விழுக்காட்டின் அடிப்படையில் பூஜ்யம் புள்ளி அரை சதவிகிதம் (0.5%) தான் வருகிறது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் இது மிகப்பெரிய அளவு. இந்த பதிமூன்றாயிரம் குழந்தைகளில் சிலர் நோய்வாய்ப்பட்டு இருக்கலாம். அவர்கள் பின்னால் எழுதுவார்கள். ஆனால் அந்த தொகை மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். மீதி குழந்தைகள் என்னவானார்கள். இவர்கள் தொடர்ந்து வகுப்புக்கு வருகை தந்தவர்கள் தானா? தொடர் விடுப்பில் இருந்தவர்கள் விண்ணப்பம் செய்வது கடினம். குறிப்பிட்ட சதவிகிதம் வருகைப் பதிவு இல்லாமல் விண்ணப்பம் செய்ய முடியாது! அப்படியானால் இவர்கள் எங்கு போனார்கள்? இவர்கள் எதிர்காலம் என்னவாகும்?
தேர்வுக்கு வருகை புரியாதோர் குறித்த தெளிவான புள்ளிவிவரத்தை பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும். இது குறித்த தீவிர ஆய்வு அவசியம். அந்தந்த பள்ளி முதல்வர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இது குறித்த முழு புள்ளிவிவரத்தையும் தமிழக அரசு தருவிக்க வேண்டும். இது அவசியம் மட்டுமல்ல அவசர தேவையும் கூட.
நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள், பார்க்கும் செய்திகள் எதுவுமே நாம் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை தருவது போன்ற சூழலை ஏற்படுத்தி இருப்பதாக தெரியவில்லை! போதை, சினிமா, நடிகை, சாதி, மதம் பின்னால் தான் குழந்தைகள் ஈர்க்கப்படுகிறார்கள். கட்சிகள் அவர்களை ஓட்டு வங்கியாக பார்க்கத் துவங்கியுள்ளது. அவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விட இலவசங்கள் மூலமாக ஈர்க்கப் பார்க்கிறது. சாதித் தலைவர்களுக்கு இந்த குழந்தைகள் தான் படைபலம். போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சினிமாக்காரர்களுக்கும் இவர்கள் வாடிக்கையாளர்கள். பெண் குழந்தைகளின் நிலை இன்னமும் மோசம். தேர்வுக்கு வராதவர்களில் எத்தனை பேர் பெண் குழந்தைகள், இந்த குழந்தைகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற மாவட்ட வாரியான, தாலுகா வாரியான, பள்ளியளவிலான தரவுகள் தேவை.
இவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வராவிடில் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் மனிதவள குறைபாட்டை நாம் எதிர்கொள்ள நேரிடும். இது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற கவலை தான் மிஞ்சுகிறது. இது குறித்து பேச எந்த அரசியல் கட்சிகளுக்கும் நேரமில்லாதது கவலை அளிக்கிறது.
- நாடோடி Nomad
#தேசம்
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க அதன் மனித வளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நிறுவனத்தின் மனித வளம் என்பது அதன் நிறுவனர் துவங்கி முதலீட்டாளர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் வரை நீள்கிறது. இவர்களின் திறன், திறமை மற்றும் அர்ப்பணிப்பு தான் அந்த நிறுவனத்தை முன்னுக்கு கொண்டு வரும். ஒரு நிறுவனம் அதன் மனித வளம் குறித்து சிந்திக்கையில் பாலின, சாதி, மத, இன, மொழி பாகுபாடு பாராமல் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பு கொடுத்தால் தான் நிறுவனம் அதன் குறிக்கோளை எட்டும். அதை விடுத்து சாதி மத இன பாகுபாட்டோடு ஒரு நிறுவனம் இயங்கும் பட்சத்தில் அது நீண்ட காலம் பயணிக்காது.
இது ஒரு தேசத்திற்கும் பொருந்தும். ஒரு தேசம் என்பது ஒற்றை தேசமாக இயங்குதல் அவசியம். அதற்கு ஒற்றை மொழி மற்றும் ஒற்றை கலாச்சாரம் அவசியமில்லை. பலதரப்பட்ட மக்கள் மொழிகள் கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு, அனைத்து தரப்பு மொழி இன கலாச்சார பண்பாட்டிற்கு மதிப்பளித்து வந்தாலே போதும். ஒற்றை தேசம் என்பது 'ஒரே மொழி ஒரே கலாச்சாரம்' என்பது பிரிவினைக்கு தான் வழிவகுக்கும். இந்தியாவின் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் அதை நோக்கியே நகர்கின்றன.
இந்தியா மட்டுமல்ல தமிழகத்தின் வளர்ச்சியிலும் பல்வேறு மொழி பேசுவோரின் பங்கு உள்ளது மறுக்கவே முடியாத உண்மை. கடந்த சில வருடங்களாக வடக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கடுமையான உடல் உழைப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் உடல்வாகு அதற்கு ஒத்துழைக்கிறது. அதிக melting point (உருகு நிலை) கொண்ட பித்தளை செம்பு உற்பத்தி இடங்களில் நம் மக்களால் நிற்கக்கூட முடியாது. ஆனால் பீகாரிகளால் முடியும். தொழில் வளர்ச்சியில் மார்வாரிகளின் பங்களிப்பும் அசாத்தியமானது. அது போல் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு சில மாநிலங்களும், உற்பத்திக்கு சில மாநிலங்களும், சுற்றுலா வருமானங்களில் சில மாநிலங்களும் முன்னணி வகிக்கின்றன. அதே வெளிநாட்டில் பணிபுரிவோர் மூலமாக அயல்நாட்டு பணம் இந்தியா சந்தைக்குள் பாய்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மாநிலங்களும் உண்டு தானே! இதில் ஒரு மாநிலம் உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கருத்து எவ்வாறு உகந்தது. இந்தியா முழுவதும் ஒரே சந்தை தான். சந்தை வளர்ச்சி அடைவது தான் உண்மையான தொழில் வளர்ச்சி. அதற்கு பாகுபாடு இல்லாத வளர்ச்சி அவசியம்.
பிஜேபி மதத்தின் பேரில் தேசத்தை கட்டமைக்க முயன்று மதத்தின் அடிப்படையில் பிரிவினை பேசுகிறது. திராவிடம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அடிப்படையில் தான் கட்சி கொள்கையையே கட்டமைத்தது. தமிழ்த்தேசிய கட்சிகள் இனவாத அடிப்படையில் அரசியல் பேசுகின்றன. எதுவுமே மாநிலத்திற்கோ தேசத்திற்கோ உகந்தது அல்ல. அத்தனையுமே ஒதுக்கப்பட வேண்டும். பிரிவினை தூண்டாத துவேஷம் வளர்க்காத கட்சிகளே இல்லை என்றாகிவிட்டது.
- நாடோடி Nomad
#இணைய_எழுத்துக்கள்
மாறி வரும் சுற்றுச்சூழல் குழந்தைகளிலும் குழந்தைகளின் கல்வியிலும் மொழியிலும் கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று கடந்த பதிவில் தெரிவித்திருந்தேன். குறிப்பாக இணைய பரிவர்த்தனைகள். Digital transactions ஏற்படுத்தும் பாதிப்புகள் எத்தகையது? இணைய பரிவர்த்தனைகள் ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பிருந்தே பெரு நிறுவனங்களுக்கும் அவர்களின் விற்பனை இடைத் தரகர்களுக்கும், முகவர்களுக்கும் இடையே வங்கி மூலமாக இணைய பரிவர்த்தனைகள் நடந்து வந்திருப்பதை கண்டிருக்கிறேன்.
இருபது வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் இணையமயமாகிவிட்டன, அதாவது core banking. பணப் பரிவர்த்தனைகளை மத்திய அரசு கட்டுப்படுத்த ஆரம்பித்த பின்னர் அனைத்து தொழில் நிறுவனங்களும் வங்கி பரிவர்த்தனைகளுக்குள் வந்துவிட்டன. இணைய பரிவர்த்தனைகள் பரவலாக ஆரம்பித்தது. சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின்னர், மத்திய அரசு இணைய பரிவர்த்தனை வசதிகளை எளிமைப்படுத்தி, கைபேசிக்குள் கொண்டு வந்து விட்டது. வங்கிக்கணக்கு என்பது சாமானியரையும் வந்தடைந்து விட்டது. வங்கி பரிவர்த்தனைகளும் பணப் பரிவர்த்தனைகளும் முற்றிலும் இணைய மயமாகிவிட்டன.
வங்கி சாமானியரையும் சென்றடைந்து விட்டது. இன்றைய பத்து பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட பணம் செலுத்தும் வங்கிச் சீட்டு (pay in slip, cheque deposit challan, withdrawal slip) நிரப்ப தெரியவில்லை என்பதே அவர்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. ஆனால் அதற்கான அவசியமே அவர்களுக்கு இல்லை என்பது குறித்து ஏன் யாரும் சிந்திப்பதே இல்லை. பரிவர்த்தனைகள் மொத்தமும் இணைய மயமாகி விட்ட பின்னர் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட தேவையில்லாமல் ஆகி விட்டது. காசோலைகள் கூட பெயரளவிற்கு தான் உபயோகப்படுத்தப் படுகிறது. சுமோ காரில் இருந்து சுண்டல் வரை ஜி-பே, ஃபோன் பே மூலமாகவே விற்பனை ஆகிறது. இனிமேல் குழந்தைகள் வங்கிச் சீட்டு நிரப்ப கற்று என்ன ஆகப்போகிறது!
வேலைக்கான விண்ணப்பம் தொடங்கி, வேலைக்கான நியமன ஆணை வரை எல்லாமே மின்னணு மயமாக்கப்பட்டு விட்டன. அனைத்தும் மின்னஞ்சல் மூலமாகவும் வாட்சப் மூலமாகவும் அனுப்பப்படுகின்றன. நிறுவனங்களுக்குள்ளான தொடர்புகள், அவர்களின் நிர்வாக ரீதியான தொடர்பு மற்றும் பணியாளர்களுக்குள்ளான தொடர்பு அத்தனையும் மின்னணு மயமாக்கப்பட்டு விட்டன. அவ்வளவு ஏன் பள்ளி கல்லூரி விண்ணப்பங்கள் கூட இணைய மற்றும் மின்னணு மயமாக்கப்பட்டு விட்டன. பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையத்தில் தான் வெளியிடப்படுகிறது. ஆக தட்டச்சின் தேவை அதிகரித்து எழுத வேண்டிய அவசியத்தை முற்றிலுமாக குறைத்து விட்டது.
மொழி நடையும் நிறைய மாற்றங்களை அடைந்து விட்டது. 'Thank u, How r u' போல வார்த்தைகள் சுருங்கி விட்டது. As soon as possible போன்றவை 'ASAP' என்று அரசாங்கத்தின் அதிகாரபூர்வ சுற்றறிக்கைகளிலேயே இடம்பெறுகின்றன. எழுத வேண்டிய அவசியம் முற்றிலுமாக அற்றுப்போய், தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகள் கூட நிறைய சுருங்கி விட்டது. இந்த வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாமல் குழந்தைகளை குறை கூறி வருகிறோம். இதே விடவா பெரிய சோதனைகள் உள்ளன குழந்தைகளுக்கு??
- நாடோடி Nomad
#அறிவியல்_வளர்ச்சியும் - #குழந்தைகளும்
தற்போதைய குழந்தைகளுக்கு எல்லாமே வெகு வேகமாக மாறுகிறது! மாற்றம் என்பது நிரந்தரம் தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த மாற்றம் நிகழும் வேகத்தின் விகிதம் தான் அச்சம் அளிக்கிறது. முந்தைய தலைமுறையில் சுழல் முகப்புடன் (dial phone) கூடிய தொலைபேசி எண் முகப்புக்கு (Button phone) மாறுவதற்கே முப்பது நாற்பது ஆண்டுகள் ஆகின. கருப்பு வெள்ளை படம் வண்ணப் படமாக மாறுவதற்கு அரை நூற்றாண்டு ஆனது. மகிழுந்துகளும் பேருந்துகளும் பல்லாண்டு காலம் மாற்றம் அடையாமல் இருந்தன. இதனால் தகவமைப்புக்கான அவசியம் பெரிய அளவில் ஏற்படவில்லை. ஆதலால் அது குறித்த கல்வியிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. கட்டிட பொறியிலும் எந்திரவியலுமே பல்லாண்டு காலங்கள் தேவைக்கும் மிக அதிகமான படிப்பாக இருந்தன.
ஆனால் இன்றைய சூழல் வெகு வேகமாக மாறி வருகிறது. இன்று படித்த படிப்பு நாளையே மதிப்பு இழக்கிறது. வாகனங்களின் தேவை, மின்சாரத்தின் தேவை, மின்னணு உபகரணங்களின் தேவை அதிகரித்து விட்டன. தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு மற்றும் ஊடகங்களின் வளர்ச்சியின் வேகம் பிரமிப்பூட்டுகிறது. இதனால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான வளர்ச்சியும் வெகுவேகமாக நம்மை வந்தடைகின்றன. தொழில்நுட்பம் டையோடு வால்வில் இருந்து டிரான்சிஸ்டருக்கு மாற பல ஆண்டுகள் ஆகின. ஆனால் டிரான்சிஸ்டர் இன்று சிப்புகளாகவும், சிப்புகள் இணையத்திற்கும் வெகு வேகமாக மாறி விட்டன. இணைய வசதிகளின் வளர்ச்சி, கணிணியின் வளர்ச்சிக்கு வித்திட்டு இன்று செயற்கை நுண்ணறிவு வரை கொண்டு வந்து சேர்ந்துவிட்டது.
இத்தனையும் அறிவியல், விஞ்ஞானத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, மொழி, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு அத்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இதுவரை மற்றவற்றை கற்றவை அத்தனையையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.
இத்தனை மாற்றங்களையும் இந்த மாறுதல் வேகத்தையும் உணர்ந்து குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த மாற்றங்களுக்கு தக்க கல்வியையும் சர்வதேச சமுதாயம் மாற்றத்திற்கு உட்படுத்தி குழந்தைகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இது பத்தாது என்று சனத்தொகை வளர்ச்சி கடும் போட்டியை உருவாக்கி, போட்டித்தேர்வுகளை அதிகரித்து போட்டி மனப்பான்மையையும் அதிகரித்து, அதுவும் மறுபுறம் மன அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இன்றைய குழந்தைகள் பாவம் தான்.
- நாடோடி Nomad
( #மிருக_இயல்புணர்வு)
ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு பூனைக்குட்டியை யாரோ எங்கள் வீட்டு மாடிப்படியில் விட்டு விட்டு சென்றிருந்தனர். பொதுவாக பூனை வளர்ப்பில் எனக்கு பெரிதாக ஈடுபாடு கிடையாது. எனக்கு நாய்கள் என்றால் உயிர். கல்யாணத்துக்கு முன் வரையில் வீட்டில் நிச்சயமாக இரண்டு நாய்களாவது இருக்கும். குழந்தைகள் நாய் வளர்க்க விரும்பி கேட்ட பொழுது, 'அந்த நாய் உள்ளே வந்தால் வீட்டில் இருக்கும் நாய்கள் (என்னையும் சேர்த்து தான்) எல்லாம் வெளியே போய் விட வேண்டும்!' என்று கூறி விட்டார்!! எனக்கு பூனைகள் மீது அபிமானம் இல்லாமல் போனதன் காரணம் முன் அனுபவம். நாய்களை போல் பூனைகளை சாதுவான வீட்டுப்பிராணியாக (Taming) வளர்க்க முடியாது. நாம் என்னதான் கறி, மீன், கோழி என போட்டா வளர்த்தாலும், அசையும் உருவங்களை பார்த்தவுடன் அவற்றின் காட்டு இயல்புணர்வும் (Wild instincts), வேட்டையாடும் இயல்பும் (Hunting instincts) கிளம்பிவிடும். அதன்பின் அதனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்கு பசிக்குதோ இல்லையோ அவற்றை வேட்டையாடி விடக்கூடியவை. அதே போல் அவை சந்தர்ப்பவாதிகளும் (opportunists) கூட. வாய்ப்பு கிடைத்தால் உணவை களவாடக்கூடியவை (scavengers). எங்கள் வீட்டில் வளர்ந்த பூனை ஒன்று கரட்டாண்டி (ஓணான்), போன்றவற்றை உயிருடன் வீட்டுக்கு தூக்கி வந்து அவற்றை குற்றுயிரும் குறை உயிருமாக வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக (வேட்டையாடி பழகி) கொல்லும். கடைசியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்றிடம் கடி வாங்கி பின் அதை வீட்டுக்கு தூக்கி வந்து இறந்து போனது. அந்த கட்டுவிரியனை அடித்து கொன்று அதன் பின்னர் அந்த பூனையையும் கொண்டு போய் புதைக்க நேர்ந்தது.
இதெல்லாம் குழந்தைகள் பொறுக்காது. ஆதலால் அந்த அநாதரவான பூனையை வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அப்படியே வெளியே விட்டால் அது இறந்து விடும். கண்களை அப்பொழுது தான் திறந்த நிலையில் யாரோ அதை மாடிப்படியில் விட்டுச் சென்றிருந்தனர். ஆதலால் அது தேறும் வரையில் வைத்திருக்க அனுமதி கொடுத்தேன். அதன் உரோமங்கள் உதிர்ந்து நோய்வாய்ப்பட்டு சாகும் நிலைக்கு சென்ற பூனைக்குட்டி குழந்தைகள் கவனிப்பில் தேறி விட்டது. குறிப்பாக என் மகள் அந்தப் பூனைக் குட்டிக்காக எதையும் இழக்க தயாராக இருந்தாள். அதுவும் அவளின் மிகவும் பிரியமாக இருந்தது. கொஞ்சம் வளர்ந்ததும் அதன் வேலையை காண்பிக்க ஆரம்பித்தது. கரப்பான் பூச்சி போன்றவை பிடித்து வந்து வைத்திருந்து விளையாடிவிட்டு உண்ண ஆரம்பித்தது. அதுவரையில் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு நாள் அணில் பிள்ளை ஒன்றை இறப்பின் கடைசி நிலையில் தூக்கி வந்து உண்ண ஆரம்பித்தது. மகள் அந்த அணில் பிள்ளையை காப்பாற்ற முனையும் போது பூனை அவளை நோக்கி சீறியது. முதலில் என் மகள் நிலை குலைந்தாலும் அதன் பின்னர் சுதாரித்து அணிலை மீட்டாள். ஆனால் அணில் உயிரை விட்டிருந்தது.
நான் நினைத்தது போலவே பிள்ளைகள் கலங்கியிருந்தார்கள். ஆனாலும் பூனைக்குட்டி மீதிருந்த பாசம் அவர்களை விட்டலகவில்லை! சென்ற வாரத்தில் வீட்டின் முற்றத்தில் ஏதோ பிராணி உயிருக்கு போராடும் சத்தம் கேட்டது. பிள்ளைகள் கதவை திறந்து பார்த்துவிட்டு பூனைக்குட்டி ஏதோ பெரிய பிராணியை தூக்கி வந்து உள்ளதாக கூறி பயந்தனர். பெருச்சாளியாக இருப்பதாக தெரிவதாக கூறினர். பொதுவாக பெருச்சாளிகளை பெரிய பூனைகளே அண்டாது. பெருச்சாளிகள் பூனைக்கு அஞ்சாதவை. பூனைகளையும் எதிர்க்கக் கூடியவை. குறிப்பாக கவனிப்பின்றி கிடக்கும் பூனைக்குட்டிகளை கபளீகரம் செய்து விடும். ஆதலால் நிச்சயமாக பெருச்சாளியாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதி கதவை திறந்து பார்த்தால், தவிட்டுக் குருவி ஒன்றை தூக்கி வந்திருந்தது. இரவு நேரத்தில் மரத்தில் தூங்கிய குருவியை தூக்கி வந்திருக்கலாம். அது தன்னை காப்பாற்றிக் கொள்ள இறக்கையை விரித்திருந்த நிலையில் பிள்ளைகள் ஏதோ பெரிய விலங்கு என்று நினைத்து விட்டனர். குருவியை அதனிடம் இருந்து மீட்ட நிலையில் குருவி பறக்க முடியாத நிலையில் இறகொடிந்து மரண தருவாயில் இருந்தது. இரவு நேரத்தில் அதை காப்பாற்ற முடியவில்லை. புதைத்து விட்டேன். இன்னமும் பூனை மீதுள்ள பாசத்தால் பூனையை விட முடியாமல் பிள்ளைகள் பூனைக்குட்டியை வளர்த்து வருகின்றனர்.
- நாடோடி Nomad
#சாக்கடை_அரசியல்
சமூக ஊடகங்கள் மற்றும் டீக்கடை என அனைத்து இடங்களிலும் மதம், மார்கம், சாதி, இனம், மொழி போன்ற பிரிவினை பேச்சுக்கள் தாண்டி வேறு எதுவுமே இல்லை! நாட்டின் பொருளாதாரம், ஆரோக்கியமான அரசியல், கல்வி குறித்து பேசுபவர்கள் மிக மிகக் குறைவு! இங்கு உள்ள பெரும்பாலானோர் பெற்றோர்கள் அல்லது அண்ணன் அல்லது அக்காவாக இருப்பவர்கள் தான். குழந்தைகள் தம்பி தங்கைகள் நலன், எதிர்காலம் குறித்தெல்லாம் யாரும் பேசுவது போலத் தெரியவில்லை. தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள், சுகாதார சீர்கேடு குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவது போலவும் தெரியவில்லை!
இது தான் இந்துத்துவாவின் வெற்றி, இது தான் திராவிட மாடலின் வெற்றி ஒரு மூன்றாம் தர சினிமா இயக்குனர் அல்லது கதாசிரியர் போல், ஒரு நாலாந்தர ஊடகவியலாளர் போல மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, எப்பொழுதுமே யதார்த்தத்தை பற்றி சிந்திக்க விடாமல் வைத்திருப்பதே அவர்கள் வெற்றி. பாலத்தின் இந்தப்பக்கம் எங்கள் வீடு, அந்தப்பக்கம் டாஸ்மாக். குடித்து விட்டும், கடை மூடு முன் குடித்துவிட வேண்டும் என்றும் அவசரமாக சாலையை கடப்பவர்கள், பாலத்தில் இருந்து இறக்கத்தில் வேகமாக வருபவர்கள் என நடக்கும் விபத்துக்கள் கணக்கிலடங்கா! பள்ளிப் பேருந்துகளுக்காக இந்த சாலையை கடக்கும் குழந்தைகளும் கணக்கிலடங்கா. இதைப்பற்றி பேச யாருக்கும் நேரமில்லை. அவசியமுமில்லை.
திருச்சி செந்தண்ணீர்புரத்தையும் ஜி கார்ணரையும் இணைக்கும் பாலம் பழுதடைந்துள்ளது. கட்டி சில வருடங்கள் தான் இருக்கும். கட்டி லாபம் பார்த்த ஒப்பந்ததாரரும், அனுமதி கொடுத்த மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஹாயாக இருக்கிறார்கள். அந்த பாலத்தை சாதாரணமாக கடக்க இரண்டு நிமிடங்கள் ஆகும்! தற்சமயம் நான் பணிக்கு செல்லவும், திரும்ப வீடு வந்து சேரவும் அந்த பாலத்தை கடக்க மட்டுமே கால் மணி நேரத்தில் இருந்தா அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. கடந்த வார இறுதியில் ஒரு மணி நேரம் ஆயிற்று.
மத்திய அரசின் நேரடி உதவி பெறும் தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அது குறித்து மத்திய அரசும் தெளிவான வழிகாட்டலை வழங்குவதில்லை. நம்மில் யாருக்குமே அது குறித்த விழிப்புணர்வும் இல்லை. குடும்பத்தில் முதல் முறையாக தொழில்முனைவோருக்கு நிறைய மானியங்கள் உண்டு. குறிப்பாக பெண் தொழில்முனைவோர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் உள்ளன. சமீபத்தில் வெளுத்து வாங்கும் உணவக தொழில்கள் மற்றும் கல்வி சார்ந்த தொழில்கள் போன்றவற்றில் பெண் தொழில்முனைவோர்களுக்கு நிறைய நல்ல வாய்ப்புகள் உள்ளன. இது குறித்தெல்லாம் நமக்கு பேச நேரமில்லை அல்லது தோணவில்லை. இது அரசியல்வாதிகளின் வெற்றி. முன்பு இது குறித்து கம்யூனிஸ்டுகள் நிறைய பேசுவார்கள். எங்களது கல்லூரி காலங்களில் வீதி நாடகங்கள் நடத்தியிருக்கிறோம். இப்போது கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்பவர்கள் அனைவரும் போலிகள்.
எந்த மொழி பேசுபவரோ, எந்த மதத்தை சார்ந்தவரோ, எந்த சாதியோ அத்தனையும் சேர்ந்த சக்தி தான் ஒரு நாட்டின் மனிதவளம் என்பது. இதை பிரித்துப் பார்த்தால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் கேடு தான். ஆங்கிலேயன் நம்மை பிரித்து ஆண்டான் என்று வரலாற்றில் படிக்கும் நமக்கு நம்மை அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருக்கவே விரும்புகின்றன என்று புரியவில்லையா! பாமரைரையும் விட படித்தவர்கள் மத்தியில் தான் இந்த பிரிவினை வாதம் அதிகம் உள்ளது வேதனை அளிக்கிறது.
- நாடோடி Nomad
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Tiruchirappalli
7/4 Srinivasa Puram, Tennur, Trichy
Tiruchirappalli, 620003
Institute with guidance by Government Officers ,Subject Experts and Academicians. We don't Just teach we train you
Sundhar Nagar, K. K. Nagar , Trichy
Tiruchirappalli, 600021
WISDOM CARE ACADEMY, TUITION CENTRE 1st to 12th STD : all subjects SPOKEN ENGLISH & HINDI TOGA CLASSES DRAWING & CLASSES AARI WORK CLASSES TANJORE PAINTING CLASSES ...
Sulaiman Hazrath Street, Kaja Nagar, Kajamalai
Tiruchirappalli, 620020
Balancing Education and Life.
Thillainagar
Tiruchirappalli
Lifehouse Academy provides relevant and practical courses that help youngsters rise up with skills an
Tiruchirappalli, 612001
Institute of rail technology and safety management
Urumu Dhanalakshmi College, Pappakuruchi Village, Kattur
Tiruchirappalli, 620019
Education is the key to success, and it's our goal to provide you with a path that leads you there.
7, Race Course Road
Tiruchirappalli, 620020
Building Values & Leadership
Periyar Maniyammai Nagar, Near BHEL Quatres, Immanuvel Church, Thuvakudimalai. Trichy/22
Tiruchirappalli, 620022
A Knowledge centre