புத்தக மதிப்புரை-Book Review

அகம் படிப்பதை படம் பிடித்து பகிர்ந்துடும் முயற்சி இது

26/04/2024

"ஆதிமங்கலத்து விஷேசங்கள்" எனது பார்வையில்
**********************************************
ஆசிரியர்: க. சீ. சிவக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 120 Rs
பக்கங்கள்: 128

இது கட்டுரை தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு அத்தனைச் சுவாரசியம் நிறைந்த புத்தகமாக இருந்தது. எனது நண்பன் அக்பர் அலி, க. சீ. சிவக்குமார் அவர்களைப் பற்றி சொன்னதிலிருந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. 24 கட்டுரைகளைச் சுமந்து வந்துள்ள இந்தப் புத்தகம் ஆதிமங்கலம் என்ற கிராமத்தில் பூத்திட்ட புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர் சொன்னது போல "ஆதிமங்கலம் என்பதும் நம் அனைவரின் ஊரும் தான்".

முதல் கட்டுரையான பஸ்ஸில் ஆரம்பித்த நகைச்சுவையும், சிரிப்பும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. இறுதி பக்கம் வரை நின்று சிரித்தது. ஒவ்வொரு தலைப்பையும் கடக்கும் போது, எவ்வளவு ஞானம் நிறைந்த மனிதராக ஆசிரியர் இருந்திருக்க வேண்டும் என்ற வியப்பைத் தந்து கொண்டே இருந்தது.

ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு மனிதனும் நுகரும் போது வந்திடும் ஆச்சரியத்தையும், அனுமானத்தையும், அணு அணுவாய் அனுபவித்து எழுதி இருக்கிறார். எல்லாம் தெரிந்தது போல அடித்து விடும் அப்பாடக்கர்களையும், பிற்காலத்தில் அதன் பொருள் புரிந்து வழிவதையும் பார்க்கும் போது, நாமும் இன்றும் இது போன்று உளறி திரிவது எல்லா காலத்திலும் நிகழும் போல என்ற உணர்வைத் தந்து சென்றது.

இந்த கதையில் தொழிநுட்ப புரிதல் இல்லாது பேசிடும் வசனத்தில் எனக்கு பிடித்த ஒரு சில இங்கே:

1) கிருஷ்ணவேணி அவள் தோழியை அழைத்துக் கொண்டு போட்டா எடுக்க செல்கிறாள். பவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கி விட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்து விட்டான். படம் எடுத்த பின்பும் அதே இடத்தில் நின்றிருந்தாள். அவ்வளவு தான் என்றான்.
இருவரும் மனதைத் திடப்படுத்தி கொண்டு "படத்தைக் கொடுய்யா!" என்றனர்.

"திருவிழாவை சுத்திப் பாத்துட்டு அப்புறமா வாங்க, கழுவித் தாரேன்"

"நாங்க உள்ளூர் தான். வீட்டுலயே போய்க் கழுவிக்கிறோம்... நீ இப்பவே குடு!" என்றாள். எத்தகைய எதார்த்தம் இந்த நகைச்சுவை.

2) பொந்தனிடம், நேமிநாதன் என்ற மிலிட்டரிகாரர் தபாலாபீசு பற்றி சொல்லி கொண்டிருந்தார். "என் தங்கச்சிக்கு தகவல் அனுப்பினால் போகுமா?" என்று பொந்தன் போகும் என்கிறார. நேமிநாதன் மணலில் "உகாதி நோம்பிக்கு வந்து விடுவதும்" என்று எழுதி, அந்த மண்ணை அள்ளிக் கொண்டு தபால் பெட்டியில் போட்டால் சென்று விடும் என்று சொல்ல, அப்படியே பொந்தன் செய்கிறான். ஏதேச்சையாக தங்கச்சி நோம்பிக்கு வர அதையே உண்மை என்று நம்பிடும் பொந்தன், பின்னாளில் உண்மைத் தெரிய வந்த கதைச் சுவாரசியம்.

3) தந்தி ஆதிமங்கலத்தில் அறிமுகமான புதிது. அதில் முதல் தந்தியை ரங்கநாதன் மிலிட்டரிக்கு சென்ற சேர்ந்த செய்தியை பூனாவில் இருந்து அனுப்பி விட்டான். தந்தி வந்த செய்தி கேட்ட ஊர் மக்கள் பேர் ரங்கநாதன் அம்மா காளியம்மாளை சுற்றி ஒப்பாரி வைக்கிறார்கள். அங்கு வந்த உலகநாதன் வாங்கி படித்தான். "REACHED POONA SAFELY" என்ற ஆங்கிலத்தைச் சுருக்கி "போய் சேர்ந்துட்டாரு" ன்னு சொல்ல அழுகுரல் அதிகமானது. அப்புறம் வீரியம் உணர்ந்த உலகநாதன் விளக்கமாக சொல்ல, காளியம்மாள் "ராசுக்கோலு இதுக்கு போயா தந்தி அடிப்பாங்க" என்றாள்.

4) மோட்டார் பைக் அறிமுகமான சமயத்தில் காத்தமுத்து முதல் முறையாக பைக்கை பார்க்கிறார். அப்பொழுது டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அந்த பைக்கை பற்றி தெரிவிக்கிறார். "அது ஏதோ மிருகந்தானப்பா. கம்முனு இருக்குது. அதுல ஏறி உட்கார்ந்து ஒருஉதை கொடுக்கிறான் பாரு. அது தாங்க முடியாமத்தான் "படபடா"ன்னு கிளம்பி ஓடுது. வலி தாங்காம ஓடியாற அதும் முன்னாடி நாம் நின்னமுன்னு வை... தொலைஞ்சோம். வெறி தாங்காத கழுதை என்ன செய்யுமுன்னு யாருக்கு தெரியும்? கவனமா வெலகி நின்னுக்கணும்பா. ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். இது வைக்கோலை திங்குதா, வேற எதயாச்சியுமான்னு தெரியணும்!" என்றார்.

ஆசிரியரின் எழுத்தில் இழையோடி போயிருக்கும் கிராமத்து நையாண்டி, நக்கல், ஆச்சரியம், அறியாமையென அனைத்தையும் அச்சு அசலாக தந்து இருக்கிறார். கிராமங்கள் எப்போதும் நிறைய சுவாரசியங்கள் நிறைந்தவை. அந்தச் சுவாரசியம் சிறிதும் குறையாமல் வாசகர்களை கட்டி போட்டு வைத்து இருக்கிறார். இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தால், இந்த சுவாரசியமும், இந்த ஆதிமங்கலம் அகிலமும் தெரிந்திடவாய்ப்பு அதிகம். கண்டிப்பாக இன்றைய தலைமுறைக்கு இந்தப் புத்தகம் சென்று சேர்ந்தால், அவர்களுக்கு நாம் கடந்த பாதையின் ஓர் துளியைச் சென்று சேர்க்க மெனக்கெட வேண்டியது இல்லை.

புத்தகம் முழுதும் சிரித்த நான், ஆசிரியர் இன்று உயிரோடு இல்லை என்ற செய்தி பெரும் சோகத்தைத் தந்தது. உயிருள்ள படைப்பு என்றைக்கும் நிலைக்கும் என்பதற்கு க. சீ. சிவக்குமார் படைப்பு சான்று.

சிவமணி

26/04/2024

"திருக்கார்த்தியல்" எனது பார்வையில்
********************************************

ஆசிரியர்: ராம் தங்கம்
பதிப்பகம்: வம்சி
விலை: 170 ரூபாய்

நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல்.

பெரும்பாலான கதைகளில் அம்மா-மகன், தாத்தா-பேரன், பாட்டி-பேரன், அனாதை சிறுவன், மனநிலை பாதிக்கப்பட்டவர், பசி, ஏக்கம் என்று எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு உறவை இழந்த தவிப்பும், வெறுமையும், ஏக்கமும் என்று பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. இதில் 11 சிறுகதைகள் உள்ளன.

திருக்கார்த்தியல் கதையில் செந்தமிழ், மீன்குழம்பைச் சாப்பிடும் அழகும், முதல் முறையாக ஆட்டுக்கறி சாப்பிட ஓடுவதும், சாப்பிட்டு முடித்து விட்டு சாப்பிட்ட கையை மோந்து பார்த்து கொண்டே வருவதும், திருக்கார்த்திகை அன்று ஒரு கொழுக்கட்டை கிடைக்காமல், ஒவ்வொரு வாசலை கடக்கும் பொழுதும் யாராவது அழைத்து ஒரு கொழுக்கட்டை தர மாட்டாங்களா என்று பிச்சை எடுக்காத குறையாக நிற்பதும் வலியின் உச்சம். இந்த கதையை படித்துவிட்டு நிறைய கொழுக்கட்டைகளை தர வேண்டும் என்று செந்தமிழை தேடுகிறேன்.

டாக்டர் அக்கா கதையில் ஏழாவது படிக்கும் சிறுவனுக்கும் டாக்டர் அக்காவுக்கும் இடையில் பூத்த பேரன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு புதையல். ஆசிரியர் மாயாஜாலம் செய்திருக்கிறார் இந்த கதையில். இந்த சிறுவனின் கதையை டாக்டர் அவனது பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் பொழுது டாக்டர் அக்காவுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சி எனக்கும் ஏற்பட்டது. அந்த மனநிலை பாதிக்கப்பட்ட அந்த தாயை இந்த கதையில் வரும் சிறுவனைப் போலவே நானும் தேடுகிறேன்.

ஊழிற் பெருவலி இந்த கதையில் மனநிலை பாதிக்கப்பட்டது போல நடிக்கும் பெண்ணின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்த சமூகத்திற்கு சவுக்கடி கொடுப்பது போல இருந்தது. அவள் உடலால், மனதால் பாதிக்கப்பட்டு இன்னும் அந்த உயிர் வலியோடு ஏன் வாழ்கிறது? என்ற எண்ணம் வரும்பொழுது அந்த வலிக்கு அமைதியை தந்திருக்கிறது இந்த கதை. அந்த சூழலை கண் முன்னே நிறுத்தி, வாழ்வில் உணர்ச்சிவச பட்டால் எப்படி எல்லாம் வாழ்க்கை திசை மாறும் என்பதற்கு இந்த கதை ஆகச்சிறந்த சான்று.

பானி என்ற கதையில் வாய் பேசிடாத பைத்தியக்கார பாணிக்கும், அந்த சிறுவனுக்கும் இருந்திடும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் கொரோனா கிருமி போல அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் பானியை பிடித்து போக, பேரன்பு ஆற்றலை பரவி நிற்கிறது இந்த கதை. பானி அந்த சிறுவனுக்கு பிடித்ததை செய்து தருவதும், பானிக்கு சாப்பாடு தந்து அந்த சிறுவன் மகிழ்வதும், ஒருவேளை பானியை காணாவிட்டால் கூட அந்த சிறுவன் சாப்பிடாமல் இருப்பதும் பேரன்பின் உச்சம். இந்த கதை வாசித்து முடித்ததும் நான் என் கண்கள் சன்னலின் வழியாக பானியை தேட ஆரம்பித்தது.

ஒவ்வொரு கதையிலும் அன்பின் வேரில் வெந்நீரை ஊற்றிடும் சூழல்களும், ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு உழைப்பை உறிஞ்சிடும் ஆல மரங்களும் நிறைந்து கிடந்தன. இந்த பூமியில் இது போன்று வாழ்பவர்களின் கண்ணீரும், வேதனையும், பசி என்று வரும் போது, அவர்கள் எதையாவது செய்து அடுத்த வேளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் வாழ்வது முட்கள் மீது நடப்பது போன்ற உணர்வைத் தந்தது.

ஆசிரியர் ராம் தங்கம் உணர்வுகளை கொட்டி தீர்த்து இருக்கிறார். அவருடைய அடுத்த படைப்புகளையும் படிக்க வேண்டும் என்று ஆவலைத் தருகிறது. நாம் வாழும் வாழ்க்கை உன்னதமான வாழ்க்கை என்பதை இந்த புத்தகத்தைப் படித்த ஒவ்வொருவரும் உணர முடியும். அடுத்த தலைமுறைக்கும் இதில் உள்ள கதைகளை கதையாகச் சொல்லி புரிய வைத்தால், இளம் தலைமுறை இன்னும் செழிப்பாக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆசிரியர் ராம் தங்கம் Ram Thangam
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

18/04/2024

"Excellent" (செய்யும் எதிலும் உன்னதம்) எனது பார்வையில்
**********************************

ஆசிரியர்: பா. ராகவன்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
விலை: 160 ரூபாய்

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் உன்னதமாகவே செய்திட ஆசைப்படுகிறோம். பலர் முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்று இருப்பார்கள். பலர் முயற்சி செய்யாமல் ஆசை மட்டும் பட்டு இருப்பார்கள். வெகு சிலரே அந்த உன்னதத்தை நோக்கி ஓடி அந்த இலக்கை அடைந்திருப்பார்கள்.

பல சமயங்களில் "அவர்களைப் போலத்தான் நானும் முயற்சி செய்தேன். என்னால் ஏன் அவரைப்போல அடைய முடியவில்லை" என்ற புலம்பல்களை நாம் கேட்டிருக்கிறோம். சில நேரம் நாமே புலம்பியும் இருந்திருப்போம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தான் இந்த புத்தகம்.

உன்னதம் என்பதற்கு மிக அழகாக இந்தப் புத்தகத்தில் விளக்கம் உள்ளது. பல நல்ல விஷயங்களின் சேர்க்கையில் தான் உன்னதம் அடங்கியிருக்கிறது. அதாவது தனி மனித ஒழுக்கம், செய்நேர்த்தி, நேரம் தவறாமை, கவனம் சிதறாமை, அர்ப்பணிப்புணர்வு, சரியான உள்ளுணர்வு, உண்மை, நேர்மை இதையெல்லாம் தாண்டி நோக்கத்தில் பொது நலனும் கலந்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இதோடு ரசனையும் இருந்தால் அதி உன்னதம் நம் காலடியில் கிடைக்கும் என்பதை பல சிறந்த உதாரணங்களோடு இந்த புத்தகம் ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு உதாரணமும் ஆரம்பிக்கும் விதமும், முடிக்கும் விதமும் ஒவ்வொன்றும் தனிச்சுவை. ஒவ்வொரு உதாரணத்தின் இறுதியிலும் உன்னதம் என்ற முடிச்சை அவிழ்த்து, அதை நமக்கு அழகான மாலையாக்கி தந்திருக்கிறார் ஆசிரியர். எழுத்தில் இருக்கக்கூடிய எளிமை, புரியும் தன்மை, சொன்ன பாங்கு மற்றும் நகைச்சுவை கூடிய எழுத்து என அனைத்திலும் இந்த புத்தகம் ஒரு உன்னதத்தை தொட்டு இருக்கிறது.

இந்த புத்தகத்தைப் பற்றி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நமக்கு கிடைக்கும் அறிவுரைகளில் எப்பொழுதும் விடை இல்லாமல் ஒரு சூட்சமத்தை வைத்தே அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த சூட்சமத்தை இந்த
ப் புத்தகத்தில் எல்லா பக்கங்களிலும் தெளித்து வைத்திருக்கிறார். தெளிவு படுத்திருக்கிறார்.

மார்க்குவேஸ், டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீநிவாஸ், ஜே. எஸ். ராகவன், கி.ரா, சந்திராயன் அண்ணாதுரை, யானி, விஸ்வநாதன் ஆனந்த் டால்ஸ்டாய், நாராயணன் மற்றும் நான் சுவாசிக்கும் இளையராஜா என்று உன்னதத்தை நோக்கி பயணித்தவர்களும், அவர்களின் உணர்வுகள் அந்தந்தச் சூழலில் அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறது இந்த புத்தகம்.

முன்னாள் பாரத பிரதமர் சந்திரசேகர் அவர்களோடு நடந்த உரையாடல்களை கண்டிப்பாக வாசகர்கள் படிக்க வேண்டும். அந்த வெற்றிகரமான சிந்தனையாளன் உன்னத கனவுகளையும், உன்னத லட்சியங்களையும் சுமந்து கொண்டு இருந்தது எத்தனைப் பேருக்கு தெரியும். இந்தப் பக்கத்தை கடக்க முடியாமல் சிறிது நேரம் வியந்து போயிருந்தேன்.

இதற்கு முன்பு நேர்மறை ஆற்றல் நிறைந்த புத்தகங்கள் சிலவற்றை படித்திருக்கிறேன். அவ்வாறு படிக்கும் பொழுது சில சமயம் வாசிப்பில் சோர்வு ஏற்படக்கூடிய அளவிற்கு மொழிபெயர்ப்பு இருக்கும் அல்லது எழுத்து இருக்கும். இந்தப் புத்தகம் அதை உடைத்து இருக்கிறது. எந்தப் புத்தகத்தை எழுதினாலும் அதில் அதை சுவாரசியத்தைக் கூட்டிட முடியும் மற்றும் சுவாரசியமாகவும் எழுதிட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக பா. ராகவன் அவர்களின் எழுத்து இருக்கிறது.

இப்படி ஒரு புத்தகத்தை தந்திட்ட ஆசிரியர் பா. ராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கண்டிப்பாக இந்த தலைமுறைகள் படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் தான் இந்த எக்ஸலண்ட்.

சிவமணி

13/04/2024

“மழைக்கண்” எனது பார்வையில்
******************************

ஆசிரியர்: செந்தில் ஜனநாதன்
பதிப்பகம்: சொற்றுணை
விலை: 180 ரூபாய்

ஒன்பது கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. நவராத்திரி, நவ பாசனம், நவ துவாரங்கள், நவ கிரகங்கள் போன்று ஒன்பது கதைகளும் நவ ரத்தினங்கள். அறுசுவைகள் கொண்ட உணவே மருந்து என்கிறார்கள். இந்தத் தொகுப்பிலும் அந்த அறுசுவையை உண்ட உணர்வைத் தருகிறது. மனதிற்கு மருந்தாகி நிற்கிறது.

சிறுகதை எப்போது வெற்றிபெறும் என்றால், ஒரு கதையைப் படித்து முடித்ததும் நின்று நிதானித்து பிறகு தான், அடுத்தக் கதைக்கு பயணிக்க வைக்க வேண்டும். மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னது போல, சிறுகதைக்கு பக்கங்களுக்குள் அடங்காதது. ஆனால் ஆரம்பம் முதல் இறுதிவரை உணர்வுகள் பொதிந்த பொதியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். மழைக்கண் என்ற உணர்வு பொதியை வாசித்த பிறகு இறக்கி வைக்க முடியாமல் திணற வைக்கிறது. உறைந்து போக வைக்கிறது.

அழுத்தமான, ஆழமான கதைக்களத்தை சுமந்து வந்திருக்கிறது. நிறைய உவமைகள், சொல்லாடல் ரசிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார்.

எவ்வம் கதையில் அப்பா ரூபத்தில் இருக்கும் கொடூரனை சகித்துக் கொண்டு திரியும் மகன் பச்சைமுத்து பச்சென்று ஒட்டிக் கொள்கிறான். பாலக பருவ எதையும் அனுபவிக்கா விட்டாலும், லங்கா கட்டை உருட்டிடும் தந்தையை தக்காது கொடுக்கும் மகனின் உணர்வு நவரத்தினமாய் இருக்கிறது.

முத்தத்துக்கு கதையில் இறுதிவரை ஒரு முத்தம் பெற தவிக்கும் தவிப்பையும், முத்தம் தந்த பிறகு இருக்கும் ஆசுவாசத்தையும் தருகிறது. வாசிக்கும் போது ஈரமிக்க நமது உதடும் காய்ந்து போய் விடும் அளவிற்கு முத்தம் பெற இத்தனை வேதனைகளா! என்ற பரிதாபமும் வந்து நிழலாடுகிறது. காதலில் இருக்கும் சாதாரண தொடுதலை கூட உன்னதமாய் நினைத்திடும் நாயகனின் வலி நம்மில்லும் பயணிக்கிறது.

மழைக்கண் கதையில் பூச்சிக்கடியால் உடலெங்கும் அரிப்பு வந்திடும் அம்மாவுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டம் எதை எதையோ தொட்டு விட்டு இறுதியில் பருத்தி பஞ்சு போல இதமாக முடிவடைகிறது. சேலைக் கட்டிடும் பெண்கள் கோடைக் காலத்தில் படும் அவஸ்தையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். இந்தச் சூழலில் அரிப்போடு அந்த அம்மா படும் பாடும், அதோடு அவள் கணவன் செய்திடும் விவசாயத்திற்கு ஆதரவு தருவதும் பெண்கள் பெருஞ்சக்தி என்பதையே காட்டுகிறது. ஒரு பெண் படுக்கையில் கிடந்தால், அந்தக் குடும்பம் எவ்வளவு அல்லகோலப் படுகிறது என்ற நிதர்சனத்தை கண்முன்னே காட்சியாகி நிற்கிறது.

ஆடிஷன் அனிதாவும் நந்தன் சாரும், இருவரும் பேசிக் கொள்ளாமலே நம்மை பேச வைக்கிறார்கள். நமக்கு ஒருத்தரை பிடித்து விட்டது என்றால் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இது மாதிரி நிகழ்ந்து விடுமோ நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்று எண்ணுகின்ற பேரன்பை நந்தன் வெளிப்படுத்தும் பொழுது அனிதா மௌனித்து அதை உறுதி செய்கிறாள்.

மணலை எவ்வாறு எண்ணிட முடியாதோ அப்படி தான் இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரத்தின் கனம்.
ஆசிரியரின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது இளம் வயது போல் இருந்தாலும் எழுத்தில் அனுபவம் முதிர்ச்சி இருக்கிறது. உணர்வுகளின் ஆழத்தில் நின்று கொண்டு வாழ்வியலை வடித்து இருக்கிறார். இந்த எழுத்துக்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் எழுத்தாளர் செந்தில் ஜெகநாதன் அவர்களே.

சிவமணி

31/03/2024

"அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை" மதிப்புரை
*************************
ஆசிரியர்: ஹால் எல்ராட்
தமிழில்: PSV குமாரசாமி
பதிப்பகம்: மஞ்சுள்

இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்திலேயே காலை 8 மணிக்குள் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய 6 பழக்கங்கள் என்று புத்தகத்தைப் பற்றிய புரிதலோடு திறந்திட வைக்கிறது.இந்தப் புத்தகத்தில் இருக்கும் எதையும் இங்கே நான் பதிவிட வில்லை. ஏனெனில் நீங்கள் படித்து பயன்பெறுங்கள்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஹால், அவருக்கு நடந்த கொடூரமான விபத்துக்கு பிறகே அதிலிருந்து மீண்டு, இந்தப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் செயல்படுத்தி, வெற்றிக் கண்ட பிறகே நமக்கு தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை யார் படிக்க வேண்டும் என்றால், நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது. எனக்கு ஆசைத் தான் செயல்படுத்த முடியவில்லை என்று சொல்பவர்கள் படித்துப் பார்க்கலாம். முடிந்தால் செய்யலாம், முடியாவிட்டாலும் முயற்சித்து பாருங்கள்.

நாம் எல்லாரும் எந்த வயதிலாவது, ஏதோ ஒரு இலக்கைச் செயல்படுத்த தொடங்கி இருப்போம். அதில் சில நாட்கள் பயணித்தும் இருப்போம். ஆனால் நம்மால் சில நாட்களுக்கு பிறகு தொடரமுடியாமல் போயிருக்கும். பல வருடங்களுக்கு பின்பு, நம்மிடம் இருக்கும் திறமைகளை யாரிடமாவது சொல்லி பெருமையும் பட்டு கொள்வோம். சில சமயம் வருத்தமும் பட்டு கொள்வோம். அந்தத் திறமை ஏன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வில்லை என்றால், அதில் நாம் கவனத்தைச் செலுத்துவதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு செயலை அல்லது இயக்கத்தை நமது மன நிறைவுக்காகவோ அல்லது இலக்கு வைத்தோ தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதைத் தான் 230 பக்கங்களில் சொல்லி இருக்கிறார்கள்.

சிறிய சிறிய யுக்திகளை சொன்னாலும், நமது சூழலுக்கு ஏற்ப அதை மாற்றி அனைத்து கொள்ளலாம். இந்த யுக்தியெல்லாம் வெற்றி நோக்கி போகிறதோ இல்லையோ நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. நம்மில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையைக் குறைக்கிறது. நம்மில் பிறக்கும் ஆற்றலைப் பெருக்கிடும்.

நாம் செய்த தவறுகளை (நான் உட்பட) இங்கே பதிவு செய்கிறேன்.

1) நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி அல்லது ஜிம் செல்வது எப்படி தடைப்பட்டது என்று யோசிப்போம்

2) treadmill வாங்கிய பிறகு பலரின் வீட்டில் எந்த நிலையில் வைத்து இருக்கிறோம் என்று ஆராய்ந்து பாருங்கள்

3) எப்போது புத்தகம் வாசிப்பை நிறுத்தினோம். எதனால் நின்று போனது? என்று சிந்தியுங்கள்

4) நம்மிடம் இருந்த ஏதோ ஒரு திறமை, அதாவது பாட்டு, எழுத்து, விளையாட்டு, பொது அறிவு ஒன்றில் இன்று ஏன் நம்மிடம் இல்லை என்று கவனித்து சொல்லுங்கள்.

5) தற்போது செய்து கொண்டிருக்கும் வேலை அல்லது பொழுது போக்கு உங்கள் வாழ்க்கைக்கும், உங்களுக்கும் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது என்று உணர்ந்து பாருங்கள்.

மேலே உள்ள 5 தில், 95 சதவீதம் நபர்கள் இருப்பதாக இந்தப் புத்தகம் சொல்கிறது. நாம் மற்றும் நம்மைச் சுற்றி இருப்பவர்களால் மாற்ற பட்டு விடுகிறோம் என்பதைப் பதிவு செய்கிறது.

இந்தப் புத்தகத்தில் ராபின் ஷர்மா அவர்களின் கருத்து ஒன்று உள்ளது. அது என்னவென்றால்,

"உங்கள் வாழ்வின் முடிவில் நீங்கள் பின்னால் திரும்பிப் பார்க்கையில், உங்களால் இன்னும் அதிகமாக செய்திருக்க முடியும், அதிகமாக பெற்றிருக்க முடியும், அதிக மேம்பட்டவராக ஆகி இருக்க முடியும் என்பதை அறிந்து பின்வருத்தம் கொள்வதை விட அதிக சோகமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது" என்பதை தான் நான் இந்தப் புத்தகத்தில் சுருக்கமாக எடுத்து கொண்டது.

இந்தப் புத்தகத்தை மொழி மாற்றம் செய்த PSV குமாரசாமி அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை Discovery Book Palace ல் வாங்கினேன். வாங்கி பயன் பெறுங்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி தந்தால் போதும், அவர்கள் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிவமணி

28/03/2024

செங்கிஸ்கான் எனது பார்வையில்
*******************************
பதிப்பகம்: கிழக்கு
விலை: ரூபாய் 80
ஆசிரியர்: முகில்

ஆசிரியர் முகில் அவர்களின் ரசிகன் நான். கிளியோபாட்ரா படித்த பிறகு, அந்த நம்பிக்கையை இந்த புத்தகமும் பூர்த்தி செய்திருக்கிறது.

டெமுஜின் என்ற சிறுவன் மங்கோலிய பேரரசை நிறுவி, கான் என்ற தலைமைப் பொறுப்பை ஏற்றிய பிறகு அந்தச் சிறுவன் தான் செங்கிஸ்கானாக மாறுகிறார். இந்தப் பெயர் காரணம் கூட வியப்பு தான். சிங்கிஸ் என்றால் உறுதியான, வலிமையான என்ற பொருள்படும். கான் என்றால் தலைவன். வலிமையான தலைவன் என்பதை உணர்த்தும் படியான பெயர் தான் செங்கிஸ்கான்.

ஜமுக்கா என்ற நண்பனின் கனவைத் தானும் சுமந்து கொண்டு பல்வேறு இனக்குழுக்குகளை இணைத்து சிற்றரசனாக மாறுகிறான். சுவாசம் முழுக்க அந்த இலக்கை நோக்கியே நகர்கிறது.

எந்தப் பகுதியைக் கைப்பற்றினாலும், அங்குள்ள வீரர்களையும், மக்களையும் தன் இனத்தோடு இணைத்து கொண்ட போது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நமது ராஜராஜன் இது போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி இருப்பது நினைவிற்கு வந்தது.

செங்கிஸ்கானின் போர் திட்டத்தில் பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் தாக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்துள்ளது. அதே நேரம் தனது சொந்தங்கள் உயிரைப் பறித்தவர்களின் குலத்தையே அழித்திடும் மனோபாவமும் இருந்திருக்கிறது.

இதைப் படித்தப் பொழுது உலகம் முழுக்க இனக் கலவரம், பாகுபாடு என்பது பலமடங்கு இருந்திருப்பதும், யார் உயிர் எப்போது பறிப்போகும் என்ற பதைப்பதைப்போடும் தான் வாழ்ந்து உள்ளனர். இன்று நமது வாழ்வு எவ்வளவோ மேல்.

செங்கிஸ்கானாக மாறிய பிறகு விதித்த சட்டத்திட்டங்களைப் படித்த போது, இன்றைய அரசியல் அமைப்புகள் ஏன் இன்னும் மேம்படாமல் இருந்திருக்கிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. செங்கிஸ்கான் எடுத்த சமயோஜித யுக்திகள் இன்று நம்மால் எடுக்க முடியவில்லை என்ற ஐயப்பாடும் வருகிறது.

இன்று இருப்பது போலவே 800 வருடங்களுக்கு முன்பும் அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, யாரும் நிரந்தர நண்பனும் இல்லை என்பதை உணர வைத்தது.

எழுத்து அந்தக் காலக்கட்டத்திற்க்கே கொண்டு சென்ற உணர்வைத் தந்தது.

வாழ்த்துகள் முகில்

சிவமணி

28/03/2024

"நாடோடிக்கட்டில்" மதிப்புரை
*******************,***************
பாலஸ்தீனிய கவிஞர், புரட்சிக்கு வித்திட்ட மஹ்மூத் தர்வீஷ் அவர்களின் கவிதையை அரபு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார் முனைவர் அ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள். காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்துள்ளது இந்த நாடோடிக் கட்டில்.

இதற்கு முன்பு அமீரக கவிஞர் ஷிஹாப் கானம் அவர்களின் அரேபிய கவிதைகளைத் தமிழில் "உப்பு" என்ற பெயரில் சென்ற வருடம் வெளிவந்தது. பாலை மனிதனின் உணர்வுகளைச் சுவை மாறாமல், மொழிபெயர்ப்பின் சுவடு தெரியாத அளவில், மரத்தில் இருந்து பறித்த கனிகளின் சுவைப் போல அத்தனைத் தித்திப்பாய் மொழிபெயர்த்து இருந்தார். மொழிபெயர்ப்பின் மீது நம் இலக்கிய உலகம் ஏன் பித்துப்பிடித்து இருக்கிறது என்று யோசிக்கும் போது அமிர்தம் கிடைக்கையில் சுவைக்க ஏன் தயக்கம் என்ற விடையும் கிடைத்தது.

கவிதை என்றாலே கரைதல் தான். எதோடு கரைதல் என்ற கேள்வியை முன்வைத்தால் மனசு என்றும் சொல்லலாம், ஆனால் அது ஆன்மாவில் இருந்து வழிந்தால் மட்டுமே எழுதி முடிக்க முடியும். கட்டுரைகள், கதைகள், நாவல் கூட சில மணிநேரம் கழித்தோ, சில நாட்கள் கழித்தோ எழுத்தைத் தொடர முடியும். கவிதைகள் அப்படி அல்ல. அந்த சனத்தில் துளிர்த்து, மொட்டாகி, பூக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் முற்று பெறாத கவிதைகளாகவே தொங்கி நிற்கும்.

“நான் கவிதைக்கு எதிரானவன் அல்ல. கவிதை படிக்க ஒரு மனநிலை வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் தேநீர் போல ருசிக்க வேண்டும். அந்த சுவையோடு சஞ்சாரிக்க வேண்டும். அந்த கவிதை பல்வேறு விதமான பொருளைத் தர வேண்டும். அப்படி கவிதையைச் சிலாகித்து படிக்க வேண்டும்” என்று கவிதைகளைப் பற்றி பேசும் போது எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார்.

மஹ்மூத் தர்வீஷ் அவர்களின் கவிதைகளை அந்த மனநிலையில் தான் படிக்க வேண்டும். 128 கவிதைகள் உள்ளன.

*மனிதர்கள்* என்ற கவிதையில்

"நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை"
"இறக்கும் கதிரின் விதைகள்
நிரப்பும்
பள்ளத்தாக்கை
கதிர்களால்"

போராடுபவனைப் பிடித்து குற்றவாளியாக்கி பல புகார்களை அள்ளி தெளிப்பது போல கவிதை துவங்குகிறது. இந்தக் கவிதை வாசித்து முடிக்கும் நேரத்தில் வீரம் முறுக்கி கொண்டு வருகிறது என்றால், இந்தப் படைப்புக் காலத்தை வென்ற படைப்பு என்பதை உணர்த்தியது மட்டுமில்லாது, ஏன் மஹ்மூத் தர்வீஷ் கவிதைகளை மொழி பெயர்த்தார் என்ற கேள்விக்கும் விடைக் கிடைத்தது. ஒவ்வொரு கவிதையும் ஒரு கதைச் சொல்கிறது, ஒரு வரலாறை நினைவுப் படுத்துகிறது.

“அம்மா” என்ற கவிதையில்

"உன்னைத் தொழாமலேயே
நிற்கும் சக்தியை
இழந்து
முதுமையடைந்துவிட்டேன்"

எப்போதும் ஈரத்தோடு மகனைப் பார்த்திடும் தாயை பிரிந்து தவிக்கும் மகனின் தவிப்பு தான் இந்த கவிதை. இந்த கவிதைக்குள் நுழைந்து விட்டால் வெளிவர முடியாத கருவறை பாசம் பாசி போல நம்மைப் படர்ந்து இருக்கும்.

“கொலைசெய்யப்பட்ட வீடு” என்ற கவிதையில்

"நம்மைப் போலவே
நம் பொருட்களும்
இறக்கின்றன
ஒரு வித்தியாசம்
அவை
நம்முடன்
புதைக்கப்படுவதில்லை"

சிதைக்கப்படப் போகும் வீடு அல்லது சிதைக்கப்பட்ட வீட்டில் வாழந்தவர்களின் வலியின் வடு. ஒரு வீட்டைச் சுற்றிய சமூகத்தின் நிலையைச் சொல்லும் இந்த கவிதையில், ஒவ்வொரு செங்கலிலும் இருக்கும் ஜீவனோடு சஞ்சரிப்பது ஒரு கவிஞனால் மட்டுமே சாத்தியம்.

“பச்சை ஈக்கள்” என்ற கவிதையில்

“கொல்லப்படுபவர்கள்தான் புதிது
ஒவ்வொரு நாளும்
பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள்
உறங்க நினைத்தால்
சிறு உறக்கத்தில் இருந்து
கனவுகளற்ற உறக்கத்திற்கு
அழைத்துச் செல்கிறது
கொலை
எண்ணுக்கு மதிப்பேது?”

இந்த வரிகள் கற்பனையா? இல்லைவே இல்லை. சுடும் மணலில் உயிரோடு கழுத்துவரை புதைக்கப்பட்ட மனிதன் பார்த்த உயிர் கொலையின் நகல் இது. எங்கும் சிவப்பு நிறமாய் மாறி கிடைக்கும் பூமியின் ஒரு சொட்டைக் கவிதையில் வெளிக்காட்டி இருக்கிறார்.

“எதிரிகள் பார்க்காமலிருக்க
நம் கவலைகளைக்
குவளைகளில் பாதுகாப்போம்
இல்லையெனில்
அவர்கள்
நம்மை
முற்றுகையிட்டுக்
கொண்டாடுவார்கள்”

“பசியெடுத்தால்
என் உரிமைகளைப்
பறித்தவனின்
மாமிசத்தைத் தின்பேன்”

“மரணச் சாலையில்
இங்கே
இப்போது
இதே நேரத்தில்
ஒரு குழந்தை
பிறக்கும்”

“நிலம், விவசாயி, உறுதி
இம்மூன்று மூலப்பொருட்களை
உன்னால்
எப்படி அடிமைப்படுத்த முடியும்?”

“காணாமல்போனவன் அல்ல நான்
இத்திசை அத்திசை
முழுவானமும்
என் திசை”

நாளைய விடியலில் யார் இருப்பார்கள் என்ற கேள்வியோடு உறங்கிடும் உறக்கம், நிரந்தரமான உறக்கமாக மாறிடுமோ என்ற அச்சத்தோடு மூச்சு விடும் நிலத்தில் தரித்த கவிதைகள் அனைத்தும். இரத்தத்தையும், சதையையும் ஒரு கையில் ஏந்தி, மரணக்குழியில் போட்டு விட்டு, முற்றுகையை விரட்டி அடிக்க வேண்டி நம்பிக்கையை சுமந்து, இருக்கும் உயிர்களைக் காத்திட, அதே கையில் உணவு உண்டு வாழ்ந்திட்ட மனிதர்களின் கவிதைகள் இவை. ஒரு உயிர் இறந்த சோகத்தை தூக்கி போட்டு விட்டு, இன்னொரு உயிர் பிறந்த தருணத்தை நம்பிக்கை விருட்சமாகப் பார்த்திடும் வீரர்களின் கவிதைகள் இவை.

பசுமை நிறைந்த இடத்தில் எல்லாம் இரத்தக்கறை படிந்து நிறம் மாறிய மண்ணின் வாசத்தை மாற்றிட, எது சுகந்திரம் என்ற கேள்வியோடு, சவக்குழியின் மேலிருந்து மௌன யுத்தம் நடத்திடும் இளைஞனின் கனவைச் சுமக்கும் கவிதைகள். இந்த நிலத்தில் நின்று கொண்டா கவிதைகளை எழுதினார். இந்த வலிகளை வாசிக்கும் போதே, இந்த கவிதைகளை மையிக்கு பதிலாக இரத்தம் கலந்தே கூட எழுதியிருக்க கூடும் மஹ்மூத்தின் கரங்கள். கவிதைகளை வடிக்கையில் மஹ்மூத்தின் கண்கள் பல ஆறுகளை உருவாக்கி இருக்கும்.

இந்த நாடோடிக் கட்டில் மனிதனின் உயிர் சர்வதேச அளவில் மலிந்த போனதை உணர்த்திடும் மரணப்படுக்கை. இறைவனிடம் ஒரே வேண்டுகோள், உயிரைப் பறித்திடாத வாழ்க்கையை அனைவருக்கும் அருளட்டும். இந்த நாடோடிக் கட்டில் அந்த விழிப்புணர்வைத் தந்திடட்டும்.

டாக்டர் ஜாஹிர் அவர்கள் பாரதியார் கவிதைகளையும், திருக்குறளையும் மற்றும் ஆத்திச்சூடியையும் தமிழில் இருந்து அரபியில் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்றுக் கொண்டிருப்பது ஆகச் சிறந்த தமிழ்தொண்டு. இந்தத் தமிழ்த்தொண்டு தொடரட்டும்.

சிவமணி

28/03/2024

“காட்சிப்பிழை” எனது பார்வையில்
*********************************
ஆசிரியர்: நான்சி கோமகன்
பதிப்பகம்: பன்முகமேடை

இதிலுள்ள அனைத்து கதைகளும் சமூக நீதிக்கான கதைகள். ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு இன்றையக் காலத்து சமூகப் பிரச்சனைப் பேசுகின்றன.

இந்தப் புத்தகத்தில் பிடித்த கதைகள் என்றால் அது

பெஸ்டி
*******
உண்மையில் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை வளர்ப்பதும், பாதுகாப்பதும் எத்தனை கடினம் என்பதை உணர வைத்திட்ட கதை

நர்சம்மா
********
பெரும்பாலும் எல்லாருடைய மனதில் ஒரு எண்ணமிருக்கிறது. இன்று நிறைய மாற்றங்கள் நகழ்ந்து விட்டது என்று. இன்றும் நிறைய மூடநம்பிக்கைகள் சாரந்த கண்மூடித்தனமான செயல்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன என்பதை வலியுறுத்திய கதை.

பெரும்பாலான கதைக்களத்தை ஒரு தாயாக தன்னை நிறுத்தி கொண்டு ஆசிரியர் எழுதி இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

தொடரந்து நிறைய படைப்புக்கள் படைத்திட வாழ்த்துகள்

சிவமணி

28/03/2024

“பெண்ணால் முடியும்” மதிப்புரை
******************************

ஆசிரியர்: நஸீமா ரசாக்
விலை: 180 ரூபாய்
பதிப்பகம்: ஸீரோ டிகிரி

பெண்ணால் முடியும் என்ற புத்தகத்தை Penனால் முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் நஸீமா ரசாக் அவர்களின் புதிய படைப்பு. என்னுரை இல்லாமல் வந்திருக்கும் போதே தெரிகிறது நல்ல எழுத்திற்கு எந்த உரையும் தேவையில்லை என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார்.

எழுத்தாளர் என்றால் சுவாரசியமான நாவலைத் தருவது அல்லது சமூகத்திற்கு ஒவ்வாத கற்பனைப் படைப்பைத் தந்திடாது சமூகத்தில் சரியாக நிரம்பிடாத இடத்தை நிரப்பிட முயற்சி செய்திருக்கிறார். ஆசிரியர் அந்தச் சிறிய முயற்சியில் பெரிய விதையை விதைத்து இருக்கிறார். இன்று பெண்கள் எல்லாத் துறையிலும் தடம் பதித்து விட்டார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. அப்படியென்றால் இந்தப் புத்தகம் எதற்கு என்ற கேள்வியும் கூடவே சேர்ந்து எழத் தான் செய்கிறது.

பெண் என்பவள் எப்போதும் பெருஞ்சக்தி தான். கிளியோபாட்ரோ போன்ற அரசியல்வாதியை இன்று வரை பார்த்திட முடியாத அளவுக்கு, அப்படியொரு அரசியலை சுமார் 2300 வருடங்களுக்கு முன்பே நடத்தியிருக்கிறார். இராஜராஜனுக்கு ஒரு பஞ்சமாதேவி் என்று பட்டியல் நீண்டு கொண்டே தான் இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெண்கள் என்றால் பெருஞ்சக்தி என்று பாரதி முழங்க ஆரம்பித்தது முதல் அந்த முழக்கம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அப்புறம் ஏன் இந்த முழக்கம் தொடர்கிறது என்று பார்த்தால், இன்று இருக்கிற வளர்ச்சி பெண்களுக்கானதாக இருக்காதோ? என்ற எண்ணம் முளைக்கிறது. பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நாகரீகம், அறிவியல், தொழில்நுடபம் போன்ற பூவுக்களால் பெண்கள் நாறு மணந்து இருப்பதை தான் வளரச்சி என்று சொல்லித் திரிவதாகத் தோன்கிறது. புரிகிற மொழியில் சொல்ல வேண்டுமென்றால், பெண்களால் பலன் வருகிற தருணத்தில் பயன்படுத்தி கொள்வதாகவும் தோன்றுகிறது. இந்த வளர்ச்சி மாயைக்கும், உண்மைக்கும் இடையில் இருக்கிறது. அதாவது தனியாக பெண்கள் தனித்துவம் பெற்று இருக்கிறார்கள். ஒரு குடும்பமாய் இருக்கிறார்களா? என்றால் ஒரு தயக்கம் வரத் தான் செய்கிறது.

இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால் இன்னும் அந்தக் கட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, வேண்டும் என்கிற போது இழுத்துக் கொள்வது போல, இன்றும் குடும்பத்தில் சிக்கி கொண்டு, இலக்கை அடையும் பெண்கள் ஏராளம்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 20 சக்திகள் பற்றிய வாழ்வியல். இதில் பலரின் வாழ்வியல் கண்ணீரை வரவழைத்தது. எம். எஸ். சுப்புலட்சுமி, ராமாபாய், மிருணாளினி சாராபாய், வி. சாந்தா, சாவித்திரி பாய் பூலே, ஆர். சூடாமணி, சுதா மூர்த்தி, தமிழிசை சௌந்தராஜன் என்று அனைவரின் வாழ்வியலும் நினைத்து பார்த்திடாத சாதனைகள் நிறைந்து உள்ளது. அவர்களின் வெற்றியை மட்டும் பார்த்த நமக்கு, அந்த கரையைத் தொட எப்படி தன்னையே மெழுகாக்கி பிரகாசித்து இருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்து காட்டுகிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் வெற்றியாக பார்ப்பது எழுத்து நடையே. யாருடைய வாழ்வியலாக இருந்தாலும், எதை சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து எழுதியிருப்பதும், ஆங்காங்கே இன்றைய நிகழ்வோடு பொருத்தி எழுதியிருக்கும் எழுத்து, வாசிப்பை சுவாரசியப் படுத்தி இருக்கிறது. ஆளுமைகளின் தேர்வும் அப்படி. ஒன்றிரண்டு பேர் மட்டுமே நமக்கு பரிச்சயம்.

நான் ரசித்த வரிகள் உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறேன்.

“பூவுக்கு மலரத்தான் தெரியும். எப்படி மலர்கிறாய் என்று கேட்டால், எப்படி பதில் சொல்லும்” என்று கணவர் சதாசிவத்திடம் எம். எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு நிருபர் கேட்டப் போது, அவர் அளித்த பதில் அத்தனை நெகிழ்வு. இரு ஆத்மாக்கள் பிணைந்த தாம்பத்யம் கண்களில் தெரிந்தது.

சாவித்ரி பாய் பூலே அவர்கள் கல்வி கற்றுத்தரச் சென்ற இடத்தில் சாணத்தையும், சேற்றையும் வாரி இறைக்கும் போது, அழுக்கு சேலை அணிந்து கொண்டு, பாடச்சாலைக்கு சென்றதும், வேறு சேலை அணிந்து கொண்டதும், காந்தியடிகளை மிஞ்சிய அகிம்சைக் கண்களில் நிழலாடியது. இது நடந்தது 150 வருடங்களுக்கு முன்பு என்றால் நம்ப முடியவில்லை.

ராமாபாய் அம்பேத்கார் தனது கணவனின் லட்சியம் பாதித்திடாமல் இருக்க, அடுத்தடுத்து பிள்ளைகளைப் பறிக்கொடுத்தும் அதையும் தாங்கி கொண்ட தாய்மையைக் கண்ட போது, இன்றைய யுவதிகளுக்கு இந்தப் புத்தகம் கட்டாயம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. அம்பேத்கார் மனைவிக்கு எழுதிய கடிதம், நேரு, இந்திரா கடிதத்தை விட கொண்டாடி இருக்க வேண்டிய கடிதமாக தெரிந்தது.

இந்தப் புத்தகத்தின் வாயிலாக, அன்பின் ஆழம் எப்படி இருக்க வேண்டும். தன்னோடு இருப்பவர்களின் இலட்சியத்தில் எப்படி துணை நிற்க வேண்டும். எந்தச் சூழலிலும் இலட்சியம் மாறாத உறுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் வாழ்வியல். உணர்வுகள் நிறைந்த வேதியியல்.

இந்தப் புத்தகத்தை யார் படித்தாலும் மாற்றம் வரும். ஒரு புத்தகம் தனி மனிதனுக்கு மாற்றத்தைத் தருகிறது என்றால், அது சமூகத்தின் மாற்றமாக கண்டிப்பாக உருப்பெறும். வாழ்த்துகள் நஸீமா ரசாக் அவர்களே

சிவமணி

28/03/2024

"உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்" மதிப்புரை
******************************************
ஆசிரியர்: எடி ஜேக்கூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிஷ் ஹவுஸ்

நாஜி வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருவரின் அருமையான வாழ்க்கை என்று ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

கடந்த நூற்றாண்டில் மிகக் கொடூரமான வதை. நரகத்தைப் பார்த்திட பிறந்த யூதர்கள் என்று சொல்லிடவே தோன்றியது இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு. உச்சக்கட்ட துன்பத்தில் இருந்தவன் வாயில் இருந்து வந்திடும் வார்த்தைகள் அனைத்தும் உதிரத்தில் இருந்து வருபவை.

"உலகில் மதிப்பிடவே முடியாத பொருள் ஒன்று இருக்கிறது என்றால் அது குடும்பம்" என்கிறார்.

"தினமும் அம்மாவிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லி பழகுங்கள். அவள் மகத்துவம் ஆனவள். சண்டப் போட வேண்டும் என்றால் வெளி மனிதர்களிடம் போடுங்கள்" என்கிறார்.

"உலகத்தில் ஆகச் சிறந்த சந்தோசம் என்பது தன்னிடம் இருப்பதை அடுத்தவருக்கு கொடுத்து மகிழ்வது" என்கிறார்.

"வாழ்வில் எதை இழந்தாலும் இழக்கலாம், மன உறுதியை இழந்து விட்டால் அனைத்தையுமே இழந்து விடுவோம்" என்கிறார். .

கிட்டத்தட்ட 20 வருடங்கள் அவர் அனுபவித்த கொடுமைகள் கனவு உலகத்தில் கூட நினைத்திட முடியாதவை. ஒரு சிறிய இழப்பில் இருந்து கூட மீண்டு வர முடியாத நம்மால், நிகழ்காலமே புதிராக இருந்த இடத்தில் மூச்சு விட்டு இருக்கிறார். தோல் உரிந்து, வயிறு சுருங்கி, தினமும் 12 மணி நேரம் உழைத்து, ஒரு ரொட்டி துண்டே உணவு என்றால் என்ன மாதிரியான வாழ்க்கையாக இருந்திருக்கும். ஒன்பது நாட்கள் தண்ணீர் மட்டுமே உணவாக கொண்டு பயணம் என்பது எத்தகைய வன்மம் நிறைந்த பயணமாக இருந்திருக்கும். பலவீனமானவர்களை விஷவாயு வைத்து கொல்வதைப் பார்த்த எடிக்கு எப்போது வேண்டுமானாலும் தனக்கு இறப்பு வரலாம் அல்லது தன்னோடு இருப்பவர்களுக்கு இறப்பு வரலாம் என்ற நிலையில், தன் கண் முன்னே அப்பாவையும், அம்மாவையும் இழந்த துயரம் தாண்டி வாழ வேண்டும் என்றால் தன்னம்பிக்கை எவ்வளவு வீரியமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் அவருக்கு சுகந்திரம் கிடைத்த பொழுது, தன் உறவுகள் யாரும் தற்போது உயிரோடு இல்லை என்ற நிலையில், தான் ஏன் வாழ வேண்டும், யாருக்காக வாழ வேண்டும் என்று யோசிக்கும் சமயத்தில், தனது நண்பன் கர்ட்டை மீண்டும் பெல்ஜியத்தில் சந்தித்த தருணத்தில் எனக்கான உறவு ஒன்று இந்தப் பூமியில் இருக்கிறது என்ற வார்த்தை அவர் உதிர்க்கும் போது, அவருடைய கொண்டாட்டத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது

முதல் முறையாக தனக்கான உணவு மேசையில் இருக்கும் போது, யாரிடமும் கை எந்தாமல், கைகளைக் கட்டி போடாமல் அவர் உணவு உண்ணப் போகும் போது, அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திடும் போது, இதற்காகவா இவர் இவ்வளவு உணர்ச்சிப்படுகிறார் என்று வாசகர்களுக்கு தோன்றலாம். அந்த வலி, பயம் என்று ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்தவர்க்கு அதுவே பெரும் சுகந்திரமாக கருதுகிறார்.

தனக்கு வாரிசு எல்லாம் இருக்குமா? தனக்கென்று குடும்பம் இருக்குமா? என்ற நிலையில் புளோராவைக் கரம் பிடித்தாலும், தனது மகனை முதல் முதலில் கையில் ஏந்திய தருணத்தில் தான் அவர் உச்சக் கட்ட சந்தோசத்தை அடைந்து இருக்கிறார்.

இறுதியாக இந்தக் கதையைப் படிக்கிறவர்கள் வலியை எடுத்து கொள்ள வேண்டாம், இந்தத் தன்னம்பிக்கையை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லும் அவர் இன்றும் 100 வயதைத் தொட்டதும் தான் தன் வாழ்வியலை, கடந்த காலத்தை புத்தகமாக போட்டு இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது மூச்சை நிறுத்தி இருக்கிறார்.

இதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான், சின்ன சின்ன சந்தோசங்களை தாண்டி எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்கிறோம். அதை அனுபவிக்க பயிற்சி எடுக்க வேண்டும் என்பதே.

இந்தப் புத்தகத்தை யார் படிச்சாலும், இப்போது இருக்கும் வாழ்க்கை சொர்க்கமாக உணர்வார்கள். ஒரு முறை கண்டிப்பாக வாசிக்கவும். யார் படித்தாலும், படிக்காவிட்டாலும் இன்றைய தலைமுறைப் படிக்க வேண்டிய புத்தகம்.

பேச்சாளர்/மொழிபெயர்ப்பாளர் நாகலட்சுமி சண்முகம் அவர்களின் எழுத்து நடை உணர்வுகளைத் தாங்கி வந்து இருக்கிறது. இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்ததின் மூலம் ஆகச் சிறந்த தமிழ் தொண்டு ஆற்றி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வாழ்த்துகள் மேடம்.

சிவமணி

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Abu Dhabi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Abu Dhabi
665

Other Abu Dhabi arts & entertainment (show all)
Ferrari World Yas Island, Abu Dhabi Ferrari World Yas Island, Abu Dhabi
Yas Leisure Drive
Abu Dhabi, 128717

Official page of Ferrari World Yas Island 🏆 World’s Leading Theme Park 🎢 Over 40 Thrilling Rides & Experiences 📸 Tag us #FerrariWorldYasIsland

𝘉𝑢𝘩𝑎𝘺 𝘴𝑎 𝑀𝘶𝑛𝘥𝑜 𝘉𝑢𝘩𝑎𝘺 𝘴𝑎 𝑀𝘶𝑛𝘥𝑜
Al Afaq Street
Abu Dhabi, 0000

Buhay sa mundo

Mahdi Chowdhury Mahdi Chowdhury
Ghiyathi
Abu Dhabi, QASWSX

MAHDI_ GAMING/LIVE IN UAE�+BD�

Abrahamic Family House Abrahamic Family House
Al Saadiyat
Abu Dhabi

Encompassing a mosque, a church, a synagogue, and a forum for learning and community engagement, the Abrahamic Family House welcomes people to explore and reflect. Open to worshi...

আসক্ত-Addicted আসক্ত-Addicted
Abu Dhabi, 50050

Nebriagaboi Gaming Nebriagaboi Gaming
Abu Dhabi

Minsan magaling kadalasan hindi

Artcafe By Nidhi Artcafe By Nidhi
Reem Island
Abu Dhabi

Handmade & Handcrafted items for your home and lifestyle �in abudhabi (uae) uae artist Art/craft supplies available

Ninja Playz Ninja Playz
Al Mihawir Street Navy Gate Abu Dhabi
Abu Dhabi, 51133

My name is Mustafa and im a gamer I love playing PUBG MOBILE You Can watch me Live at 6:30PM

MR MEMER MR MEMER
Abu Dhabi

pizz follow and share �

REEEL ISM REEEL ISM
Abu Dhabi

Reeelism is about Viral Reels and Videos around the world. Follow on FB & Insta.

Onyl Gaming Onyl Gaming
Abu Dhabi

Mail me at [email protected] for Business/Promotion or send dm on my channel. link on my bio

MhinezkiE MhinezkiE
Abu Dhabi

Mhinezkie forever tv